அம்பாறை சிக்கிய பாரியளவிலான போதைப்பொருள்!

30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள் கல்முனை மாநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதியில் இருந்து கல்முனைக்கு நீண்ட காலமாக குறித்த போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதுடன் 36 வயது மற்றும் 49 வயது மதிக்கத்தக்க கல்முனை அனுராதபுரம் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் ஆடம்பர உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த போதைப்பொருட்கள் பொலித்தீன் பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்றுப்பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.

மேலும் இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான சம்பத் குமார, அசித ரணசூரிய ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கைதான சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் அம்பாறை மாவட்ட வரலாற்றில் மீட்கப்பட்ட பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *