கல்முனை பிராந்தியத்துக்கு 28 வைத்தியர்கள் நியமனம்

(றியாஸ் ஆதம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வைத்தியர்களில் 28 பேர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமனம் பெற்ற வைத்தியர்களுக்குரிய
சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன திங்கட்கிழமை (12) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் தலைவருமான டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை, நிந்தவூர் மற்றும் திருக்கோவில் ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், பிராந்திய பிரிவுத் தலைவர்கள் மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனை கிளையின் செயலாளர் டொக்டர் எப்.எம்.உவைஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வைத்திய அத்தியட்சகர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தத்தமது பிரிவு தொடர்பான விபரங்களையும் பணிமனை மற்றும் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள், செயற்றிட்டங்கள் தொடர்பான விபரங்களையும் வழங்கினர்.
கல்முனை பிராந்தியத்துக்கு இம்முறை அதிமான வைத்தியர்கள் நியமிக்கப்பட்டதனையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மேலதிகமாகவும் இரண்டு வைத்தியர்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *