ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்ற அதேநேரம், இத்தேர்தலில் பங்குபற்றுவதில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைகளும் அதிக அக்கறை எடுத்து செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழலில், இத்தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் கட்டுப்பணம் நாளை புதன்கிழமை நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு அபேட்சகரும் ஐம்பது ஆயிரம் ரூபாபடியும், சுயேச்சைக் குழு சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு அபேட்சகரும் 75 ஆயிரம் ரூபாபடியும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.
அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த ஜுலை மாதம் 26 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது. அதற்கேற்ப நேற்றுமுன்தினம் வரையும் இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
நாளை நண்பகலுடன் கட்டுப்பணம் செலுத்துதல் நிறைவடைந்ததும் மறுநாள் 15 ஆம் திகதி வேட்பு மனுக்கள் காலை 09.00 மணி முதல் முற்பகல் 11.00 வரை தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன. அந்த வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகள் தெரிவிப்பதற்கான நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.
இத்தேர்தல் கடந்த காலத் தேர்தல்கள் போன்றல்லாது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தலாக விளங்குகின்றது. அதன் காரணத்தினால் இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் 15 ஆம் திகதி தேர்தல் செயலகமும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களின் பாதுகாப்பில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் ட்ரோன் கமெராக்களுடன் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அத்தோடு விமானப் படையினரின் ஸனைப்பர் பிரிவினரும் இங்கு பணியில் ஈடுபடுவர் என்று பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இத்தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்கள் செயற்படும் விதம் குறித்த விஷேட அறிவுறுத்தல் சுற்றறிக்கையொன்றை அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், மற்றும் நியதிச் சபைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்டறியவென விஷேட குழுவையும் இவ்வாணைக்குழு அமைத்துள்ளது. அரச சொத்துக்களின் பயன்பாடு குறித்து திடீரென அரச நிறுவனங்களுக்குள் பிரவேசித்து பார்வையிடவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. தேர்தலின் நிமித்தம் அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்துள்ள புகார்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கா தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறி அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்ைககளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இத்தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஜுலை 31 முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையும் தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறும் வகையிலான 320 செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் இத்தேர்தலை கண்காணிப்பதற்கான பணிகளில் உள்நாட்டு வெளிநாட்டு சுயாதீன குழுக்களும் ஈடுபட உள்ளன. தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதில் உச்ச பட்ச கவனம் எடுத்துக் கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அது நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் அளிக்கப்படும் பாரிய பங்களிப்பாக அமையும். அதற்காக பங்களிப்பது இநநாட்டு பிரஜைகளின் பொறுப்பாகும்.