நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் வரை மின்வெட்டை அமுலாக்குவதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
து தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
பாணந்துறை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக நேற்று காலை முதல் நாடளாவிய ரீதியில் மின்விநியோகம் தடைப்பட்டது.
பாணந்துறை உப மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியமையினால் இந்த நிலைமை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையே மின் தடைக்கு வழிவகுத்ததாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மாலை 5 மணியளவில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.
மின் தடையின் விளைவாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன.
இதன் காரணமாகத் தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று மாலை 6 மணி முதல் மின்சார பயன்பாடு அதிகரித்ததன் காரணமாகப் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.
எவ்வாறாயினும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் இயக்குவதற்கு சுமார் 4 நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்றைய கலந்துரையாடலில் மின் துண்டிப்பு இல்லாமல் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.