கிண்ணியாவில் BBQ சுட்ட கோழி சாப்பிட்ட 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
கிண்ணியாவிலுள்ள அல்மதாம் என்ற உணவகத்தில் சாப்பிட்டவர்களில் இதுவரை 26 பேர் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிண்ணியா வைத்தியசாலையில் 11 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் 6 ஆண்கள் என மொத்தமாக 20 பேரும், மூதூர் வைத்தியசாலையில் 3 பேரும், குச்சவெளி வைத்தியசாலையில் 3 பேரும் என மொத்தமாக 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக திருகோணமலை உணவு மற்றும் மருந்து திணைக்கள அதிகாரிகள் உணவகத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டதாகவும், அங்கு தயாரிக்கப்பட்ட BBQ சுட்ட கோழி, பரோட்டா மற்றும் மயோனிஸ் மாதிரிகளை சேகரித்து, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) க்கு அனுப்பியுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம். அஜீத் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள், வாந்தி, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் என அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் படி, மயோனிஸ் உரிய முறையில் தயாரிக்கப்படாமையும், உணவில் மாசு ஏற்பட்டிருப்பதும் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உணவு பொருட்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார விதிகளை பின்பற்றுவது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.