December 21, 2024
Home » News » புகலிடம்கோரி இலங்கை வந்துள்ள மியன்மார் மக்கள்!
471137413_1070801621724112_4505444637540653922_n

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய (19) தினம் கரை ஒதுங்கிய மியன்மார் படகு (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர். இவர்களை மாலை 3.00 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிசாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் இவர்களை தங்க வைப்பதற்காக ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயமும் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின் பின்னர் அவர்களை தங்க வைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (20) இவர்களுக்கான மதிய உணவை AHRC தொண்டர் நிறுவனம் வழங்கியிருந்தது.

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ.நா பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்த குடும்பத்தில் ஒருசிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபாய் வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *