December 6, 2024
Home » News » “கொடுத்துப் பார்த்தோம், நீங்கள் யார் என்று காட்டி விட்டீகள்”
1719678849062

கொடுத்துப் பார்த்தோம்

நீங்கள் யார் என்று காட்டி விட்டீகள்” என்ற ஒரு பதிவை முகநூலில் நான் வாசித்தேன்.

“உரிமையைக் கேட்பது இனவாதம் அல்ல” என்ற ஒரு பதிவையும் வாசித்தேன்.

மற்றும் ஒரு பதிவை வாசித்தேன் “ஒரு இனத்துக்கான அங்கீகாரம் மறுக்கப்படுவதில் தான் இனவாதம் இருக்கிறது” என்ற இந்த பதிவு சிந்திக்க வேண்டிய பதிவு தான்.

சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உங்கள் வழமை போன்று திட்டிக்கொண்டு வாசிக்கவும்.

இது குறித்து ஆக்கபூர்வமான விவாதம் ஒன்றுக்கு நான் புத்திஜீவி முஸ்லிம்களை அழைக்கின்றேன்.

பதிவு சற்று நீண்டு விட்டது தயவு செய்து வாசிக்கவும்.

சாதாரண முஸ்லிம்

படிக்காத முஸ்லிம்

படித்த முஸ்லிம்

இஸ்லாத்தைப் படித்த முஸ்லிம்

எந்த வித்தியாசமும் இல்லை எல்லோரும் ஒன்று போல் இருக்கிறார்கள்.

நாங்கள் எப்போதும் ரப்புல் ஆலமீன் ( அகிலத்தின் இரட்சகன்) என்று அடிக்கடி சொல்கிறோம்.

புகழ் அனைத்தும் ரப்புல் ஆலமீனுக்கு என்று சொல்லிச் சொல்லித் தொழுகிறோம்.

ஆனால் எப்படி நினைக்கிறோம் தெரியுமா? ரப்புல் முஸ்லிமீனுக்கு என்று அதாவது முஸ்லிம்களின் இரட்சகனுக்கு என்று.

அகில உலக ரட்சகன் என்று வாயால் சொல்லிக்கொண்டு முஸ்லிம்களின் இரட்சகன் என்று அடி மனதில் பதித்துக் கொண்டோம்.

இவ்வாறு புரிந்து கொண்டமை மாபெரும் தவறு.

இந்த இமாலயத் தவறை சில இஸ்லாமிய இயக்க வாதிகள் இலட்சியமாக கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய கவலை.

ரஹ்மத்துன் லில்ஆலமீன் ( சர்வ லோக அருட்கொடை) என்று எமது வழிகாட்டியை வாயால் சொல்லிக் கொண்டு ரஹ்மத்துன் லில்முஸ்லிமீன் ( முஸ்லிம்களின் அருட்கொடை) இன்று உள்ளத்தில் பதித்துக் கொண்டோம.

நாங்கள் உண்மையில் சோனக சிந்தனையில் ஊறிப் போய்விட்டோம்.

சோனக இனவாதத்துக்குள் மூழ்கி விட்டோம் என்று சொல்லலாம்.

இந்த சோனக இனவாதத்திலிருந்து எம்மை இலகுவில் மீட்டெடுக்க முடியாது

அந்த ரப்பு தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

.சோனகவாதம் தலைக்கேறி விட்டது. இனவாதப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முஸ்லிம் என்பதை முற்றாக மறந்து விட்டோம்.

இவ்வாறு மறந்துவிட்டு எம்மை ரை விசுவாசிகள் சுவனத்துக்கு சொந்தக்காரர்கள் என்று சொல்ல முடியுமா?

நாம் யார்? என்பதை புத்தியை பயன்படுத்தி,படித்த இஸ்லாத்தை மனதில் நிறுத்தி கேட்டுப் பார்க்க வேண்டுமல்லவா?

நாம் கொடுக்க வந்தவர்களா? அல்லது எடுக்க வந்தவர்களா?

நாம் நாட்டுக்காக உழைக்க வந்தவர்களா? அல்லது நாட்டைச் சுரண்ட வந்தவர்களா?

பிச்சை எடுக்க வந்தவர்களா? அல்லது பிச்சை கொடுக்க வந்தவர்களா?

எப்போதும் காகத்துக்குக் கனவிலும் ஒரு புத்தி இருக்கிறதாம். அது என்னவென்றால் கனவிலும் பீ திண்ணும் புத்தியாம்.

நாமும் இந்த காகம் போன்று இருக்க முடியுமா?

கழுதை கூட நமக்குப் பணி செய்கிறது. நாம் அதைப் போன்றாவது வாழ்ந்து விட்டு செல்லக்கூடாதா?

ஒரு சாதாரண இந்து சகோதரன் இந்து மக்கள் என்று சிந்திக்கலாம், அந்த சமூகத்துக்காக உழைக்கலாம். அதில் குற்றமில்லை.

ஒரு சிங்கள சகோதரன் தனது சமூகத்தைப் பற்றி சிந்திக்கலாம்,அந்த சமூகத்துக்காகவே உழைக்கலாம் அதிலும் குற்றமில்லை.

நான் ஒரு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவன் என்று சிந்தித்து தனது அனைத்து செயல்பாடுகளையும் அவர்களின் வளர்ச்சிக்காக வைத்துக் கொள்ளலாம்.

சில போது இனவாதம் பேசலாம். அதையும் தாண்டி மதவாதம் பேசலாம்.

அவர்கள் எத்தகைய வாதங்களைப் பேசினாலும் ஒரு முஸ்லிம் ஒருபோதும் இனவாதம் பேச முடியாது. அவன் மதவாதம் பேச முடியாது. தீவிரவாதியாக ஒருபோதும் இருக்க முடியாது. பயங்கரவாதி என்ற சொல்லை விட்டும் முற்றாக நீங்கியவனே முஸ்லிம் என்பவன்.

தொப்பி பிரட்டி என்றல்லவா? பெயர் பெற்றிருக்கிறான்.

எப்பொழுதும் எல்லாவற்றையும் கொடுக்க நினைப்பான். எல்லாவற்றையும் இழந்து தான் பெற்றுக்கொண்ட பட்டமாகிய முஸ்லிம் என்ற பட்டத்துக்குள் உள்ள இஸ்லாத்தைக் கொடுக்கவே சதாவும் சிந்தித்துக் கொண்டு வாழ்வான்.

நான் ஆனால் இறைவனை விசுவாசிக்காமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இஸ்லாத்தின் உடைய பல பண்புகளைக் கொண்டு அரசியல் கொள்கையை இந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்?

அவர்கள் தான் இவர்கள்.

இன்று எமது ஜனாதிபதி சார்ந்திருக்கின்ற கட்சி JVP ஆகும். அவர்கள் எல்லாவற்றையும் இழந்து அவர்கள் ஏற்றுக் கொண்ட கம்யூனிசம் என்ற கொள்கையை மக்கள் மத்தியில் கொடுத்துவிட்டு செல்வதற்கு அனைத்து தியாகங்களையும் செய்து கொண்டு வருகிறார்கள்.

மனிதன் உருவாக்கிய ஒரு கொள்கை அது.

இந்தக் கொள்கை முற்று முழுதாக சரி என்று நான் வாதிடவில்லை. ஒரு போதும் வாதிட மாட்டேன்.

நாம் இறைவன் தந்த சம்பூரணமான ஒரு கொள்கையை உள்ளத்தில் உறுதியாக இறுத்தி வாழ்ந்து கொண்டு வருபவர்கள்.

உண்மையில் உதட்டால் பேசிக் கொண்டிருக்கிறோம் உள்ளத்தில் ஆழமாக இல்லை அதனால் இந்த நாட்டில் அப்பாவி மக்களின் உள்ளங்களுக்கு அது செல்லவில்லை.

முஸ்லிம்களாகிய நாம் இனவாதம் பேச முடியுமா?

பதவிகள் கேட்டு சண்டை பிடிக்க முடியுமா?

தாருங்கள் தாருங்கள் என்று பதவிகள் கேட்டு சோரம் போகும் சமூகமா?

தருகிறேன் தருகிறேன் என்று எல்லாவற்றையும் கொடுத்து நாம் பெற்றுக் கொண்ட மார்க்கத்தையும் கொடுக்க வந்தவர்கள் அல்லவா?

நான் ஒருபோதும் தரவில்லை என்று கவலைப்படுவதில்லை. ஏன் நான் கொடுக்கவில்லை என்றே கவலைப் படுகிறேன்.

மறைந்த தலைவரின் கன்னி உரையில் கடுமையான பொறுப்பு கொண்டவன் நான்.

முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக பாடுபட வந்தன் என்று பேசினார். இன்னும் பல விடயங்களை அன்று பேசினார்.”நான் முஸ்லிம் சமூகத்தினுடைய மானம் காக்க வந்தவன்” என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருகும்.

அவர் மரணித்து விட்டார் அவரை விமர்சிப்பதற்கு நான் வரவில்லை என்றாலும் அந்த பாராளுமன்ற கன்னி உரை என்னைக் கவலையடையச் செய்தது.

இந்த இலங்கை நாட்டில் எம்மைப் போன்ற பெரும்பான்மை சிங்கள சமூகம் காடுகளிலும் மேடுகளிலும் யானைகளோடும் புலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் வசதிகள் இல்லை, அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் அந்த மக்களுக்கு வாழ்வு கொடுக்க வந்தேன் என்று பேசியிருக்க வேண்டும்.

அன்று முஸ்லிம் என்ற பெயரில் முஸ்லிம் இனவாதம் கக்கியது. அந்தத் தவறை நாம் செய்யக்கூடாது.

அதேபோன்று தமிழ் சமூகம் பல ஆண்டுகள் யுத்தத்தால் அனைத்தையும் இழந்து சீரழிந்து குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நான் சிறந்த வாழ்வு கொடுக்க வந்தேன் என்றல்லவா அந்த மறைந்த தலைவர் பேசியிருக்க வேண்டும்.

அவர் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்று பார்க்கப்பட்டதால் இதனை நான் சொல்கிறேன்.

இன்று அந்த மக்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் சில அரசியல்வாதிகளால் சீரழிந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் யாருக்கு உதவி செய்கிறோம்?

முஸ்லிம்கள் என்று பார்த்து கிணறுகள் கட்டிக் கொடுக்கிறோம்.

முஸ்லிம்கள் என்று பார்த்து வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம்.

அனைத்து மனிதர்களும் நன்றாக வாழ ஆசைப்பட்டு வாழ்வு கொடுக்க வந்தவர்கள் என்று சிந்திக்கிறோமா? இவ்வாறு நினைத்து இலங்கையில் நாம் முயற்சி செய்கிறோமா?

மாவட்டத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்லிக் கொண்டு அந்த மாவட்டத்தில் இருக்கிற முஸ்லிம்களை மட்டும் கவனிக்கிறோம்.

இதுவா முஸ்லிமின் பார்வை?

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு மனிதன் உருவாக்கிய கொள்கையை ஏற்றுக்கொண்டு சாதாரண மனிதர்களாக இருந்து கொண்டு மனித சமூகம் குறித்து இந்த JVP இயக்க உறுப்பினர்கள் பாடுபட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களிடம் பணம் இல்லை சொத்துக்கள் இல்லை எதுவும் பெரிதாக இல்லை ஆனால் கொள்கையும் தியாகமும் மிகைத்த கூட்டம்.

ஆனால் நாம் பிரியாணி இல்லாமல் வெள்ளிக்கிழமையில் இறைச்சி இல்லாமல் வாழ்ந்த வரலாறு இல்லை.

அவர்கள் இந்தக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள்.

பட்டலந்த முகாமில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் ஆண் பெண் வேறுபாடு இன்றி நெருப்பில் போட்டு எரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

தலை வேறு உடல் வேறாக வெட்டி பேருந்து நிலையத்தில் பார்வைக்காக வைத்தார்கள்.

டயரில் போட்டு எரித்தார்கள். எத்தனை சோதனைகளையும் அழிவுகளையும் சந்தித்து உருவாக்கிய அரசியல் கட்சியில் நேற்று இணைந்து கொண்டு முழு அமைச்சு வேண்டும் என்று கேட்பது நியாயம் தானா?

சுமார் 60 ஆண்டுகள் எதையும் அனுபவிக்காமல் தியாகம் செய்து வாழ்ந்த அவர்கள் இன்னும் எதையும் அனுபவிப்பதற்கு முயற்சி செய்யாமல் இருக்கும் நிலையில் பதவிகள் கேட்டு சண்டை பிடிக்கலாமா?

பொது நமது நாட்டின் நிலை என்ன தெரியுமா?

கரும்பை தின்று விட்டு சக்கையை மட்டும் வீசி இருக்கிறார்கள். அந்த சக்தியை கையில் எடுத்துக் கொண்டு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யானை சென்ற விளாங்காய் போன்று நாடு இருக்கிறது.

அந்தக் கட்சியின் மூல கருத்தா ட்ரில்வின் சில்வா ஒரு பதவி கூட எடுக்கவில்லை. எந்தப் பதவியையும் கேட்கவுமில்லை.

ஆனால் நமது முஸ்லிம் குஞ்சுகள் பதவிகள் கேட்டு ஓலமிட்டு ஒப்பாரி வைக்கிறார்கள்.

ஜனாதிபதி எதுவும் வேண்டாம் என்கின்றார். இந்த நாட்டிலே நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அடித்துக் கொள்கிறார்.

எல்லோருக்கும் சமநீதி வேண்டும் என்று சொல்கிறார். இந்த நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று சொல்கிறார். அதற்காக எல்லோரையும் அழைக்கிறார், இந்த நாட்டைக் கட்டி எழுப்பும் வரை நான் எனக்காக என்று எதையும் பார்க்க மாட்டேன் என்று சொல்கிறார். சட்டத்துக்கு மதிப்பளிக்கிறேன் என்று கூறுகிறார். சட்டத்தை நிலை நாட்டுவதில் நான் இரக்கம் காட்ட மாட்டேன் என்று சொல்கிறார்.

ஓர் இஸ்லாமிய ஆட்சியாளன் எதை சொல்வானோ அதைத்தானே அவர் சொல்கிறார்.

நாம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம்?

இனவாதத்தை இல்லாதொழித்து மதவாதமும் இல்லாமல் மனிதாபிமானத்தோடு வாழப் போகிறேன் என்று சொல்கிறார்.

இலங்கைப் பிரஜை என்றே எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சுகளை கொடுத்து நாட்டை தின்று விட்டார்கள் எனவே நான் 21 அமைச்சுகளை மட்டும் கொடுத்து நாட்டைக் கட்டி எழுப்புகிறேன் என்று சொல்கிறார்.

இல்லை முஸ்லிம் சமூகத்திற்கு அமைச்சுகள் தாருங்கள் என்று வெட்கமில்லாமல் சடை பிடிக்க எப்படி மனம் வருகிறது.

ஏன் நாம் இப்படி அற்பர்களாக இருக்கிறோம்? அக்பரின் அடிமை இப்படி அற்பத் தனத்துக்கு அடிமையாகலாமா?

படிக்காத சாதாரண பாமர முஸ்லிம் கேட்டால் பரவாயில்லை அதுவும் படித்த இஸ்லாத்தை ஆழமாகப் படித்த இஸ்லாத்தை நன்கு தெரிந்த அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து இஸ்லாத்தைப் படித்த முஸ்லிம் புத்திஜீவிகள் பதவிகள் கேட்டு பயங்கரமாக சண்டை பிடிக்கிறார்கள். இது தகுமா?

இது கேவலம் இல்லையா? இதற்குப் பெயர் உரிமை போராட்டமா? மூன்று இனங்களும் வாழும் நாட்டில் முஸ்லிம்களுக்கு முழு அமைச்சுப் பதவிகள் தாருங்கள் என்று கேட்பது உரிமை என்று கூற முடியுமா?

எல்லோரது விமர்சனத்தையும் தாங்கிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆதரவு பெரிதாக இல்லாமல் ஒரே ஒரு முஸ்லிம் பாடுபட்டார்.

இவர் தனது கட்சி வெற்றி பெறுமா? இல்லை வெற்றி பெறாதா? என்றெல்லாம் சிந்திக்காமல் JVP இயக்க உறுப்பினர்களோடுபயணம் செய்த அந்த ஒரு முஸ்லிம் எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்கிறார்.

ஆனால் அவருக்கு வெளிநாட்டு அமைச்சை கொடுங்கள் என்று மற்றவர்கள் சண்டை பிடிக்கிறார்கள் அல்லது துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சு ஒன்றைக் கொடுங்கள் அல்லது அவருக்கு எரிசக்தி மின் சக்தி வலுவூட்டல் அமைச்சைக கொடுங்கள் என்று ஓநாய்கள் ஊளையிடுகின்றன.

ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லை. சண்டை பிடிக்கவில்லை. கிஞ்சித்தேனும் கவலைப்படவுமில்லை.

கவலைப்படுபவர்கள் யார்?

சிந்தித்து சீர் தூக்கி இந்த நாட்டில் முஸ்லிம்களின் என்பதை காட்ட வேண்டாமா

– அப்துல் அஸீஸ் நளீமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *