December 6, 2024
Home » News » அமைச்சரவையில் முஸ்லீம் பிரதிநிதிகள் ஏன் இருக்கவேண்டும்?
Cabinet-Sri-Lanka-

அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இடம்பெறாமைக்கு நியாயங்கள் தேடும் NPP முஸ்லிம் ஆதரவாளர்களுக்கு…

இலங்கை அமைச்சரவை (Cabinet of Sri Lanka) என்பது இலங்கை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் பேரவையாகும். அரசின் முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கும் முடிவுகளை எடுப்பதற்கும் வாரத்தில் பல முறைகள் அமைச்சரவை கூடுகிறது. அவ்வாறிருக்கின்ற போது அமைச்சரவையில் முஸ்லீம் பிரதிநிதிகள் இல்லாதிருப்பது ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதே என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

இலங்கையின் தற்போதைய அமைச்சரவையில் (2024 நவம்பர்) அரசுத்தலைவர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் 21 அமைச்சர்கள், 29 பிரதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். நாட்டின் இறையான்மைக்கும் மக்களின் இனப் பரவலுக்கு அமையவும் அமைச்சர்கள் கட்டாயம் நியமிக்கப்படுவதானது நீதியான அரசு தலைவரின் கடமையாகும்.

இலங்கையில் வாழும் 10 வீத முஸ்லீம்களின் விகிதாசாரத்திற்கு அமைய 2 அமைச்சர்களையாவது நியமிக்கவேண்டும் என்பதே நியாயமும் ஆகும். எதிர்காலத்தில் அமைச்சரவை தீர்மானங்களில் முஸ்லீம்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்தப்பட வேண்டும் என்றால் அமைச்சரவையில் எமது பிரதிநிதிகளும் இருக்கவேண்டியது அவசியமே.

அரசாங்கத்தின் சட்டவாக்கத் துறையில் ஆள்புல/பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் (Territorial Representation) அல்லது சமூக ரீதியிலான பிரதிநிதித்துவம் (Community Representation) அவசியம். அரசாங்கத்தின் பிரதான நிர்வாகப் பிரிவுதான் (Executive Arm) அமைச்சரவை. அங்குதான் நாட்டைப் பாதிக்கும் மிக முக்கியமான நிர்வாக ரீதியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவேதான், அமைச்சரவையில் பன்மைத்துவம்/ பல்லினத்தன்மை (Plurality/ Diversity) பிரதிபலிக்க வேண்டும்.

எனவே இனிவரும் அமைச்சர் நியமனத்திலாவது முஸ்லீம் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டு இக்குறைபாட்டினை எமது தோழர் அநுர குமார திஷாநாயக்க அவர்கள் நிவர்த்திசெய்வார் என்று நம்புகின்றோம்.

இது தொடர்பில் சிராஜ் மன்சூர் அவரது முகநூல் பக்கத்தில் இவ்வாறு தெரிவிக்கின்றார். மன்சூர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியோடு அதனை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்ட ஒரு போராளியும், எழுத்தாளருமாவார்.

– நியாஸ் பஸ்மிர் | niasfasmir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *