(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா தொற்றுப் பரவலின் போது மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அது தொடர்பில் பரிந்துரை செய்ததாக கூறப்படும் நிபுணர் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசார பொறுப்பாளர்களில் ஒருவரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க எடுத்த முடிவின் போது செய்துகொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், இந்த சட்ட நடவடிக்கையை புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் ஜனாஸா எரிப்பு இம்முறை, ஜனாதிபதி தேர்தல் களத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் பிரதான பிரசார விடயமாக மாறியுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, ஜனாஸா எரிப்பு விவகாரத்துக்காக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் நிபுணர் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.- Vidivelli