தாய் தந்தை இருவரும் வைத்தியர்கள். அப்போது நாடறிந்த வைத்தியர்கள் இல்லாவிட்டாலும், ஊர் நன்கறிந்த வைத்தியர்கள். ஸைனப், அவர்களின் மூத்த மகள். டவுணில் பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருந்தது.
ஒரு செய்தி, ஒரு சம்பவம், ஒரு கைது என்று நாடே அலறுகிறது. தந்தை “வந்த டாக்டர்” என்ற பெயரோடு கைது செய்யப்படுகிறார். நாடு முழுவதும் பிரபலம் ஆகிறார். அந்த இரவோடு ஸைனபின் வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. “சிங்கள சமூகத்தை கருவறுக்க வந்த ஒரு வைத்தியரின் மகள்” என்று தான் பாடசாலை சமூகம் கூட, சிறு பெண்ணான ஸைனைப்பை பார்க்கத் தொடங்கிறது. நன்றாக படித்து கொண்டிருந்த பாடசாலையில் கூட, கூடப் படித்த நண்பிகளும், படிப்பித்த ஆசிரியர்களும்( ஒரு சிலரைத் தவிர) சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலை. யாருக்கும் வரக்கூடாத நிலை.
தாய் தனது மூன்று குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு கொழும்பு, கல்முனை என்று அலைகிறார். பாடசாலை தேடுகிறார். ஒரு கட்டத்தில், இங்கே இருக்க முடியாது, வெளிநாட்டுக்கு குடி பெயர்வோமா என்ற அளவுக்கு சிக்கலான நாட்டு நிலமை. சிங்கள மீடியம் படித்த பிள்ளை, தமிழ் மீடியத்தில் படிக்கிறது. கடைசியில் கண்டியில் ஆங்கில மீடியத்தில் படித்து ஓ எல் எழுதிகிறது. ரிசல்ட்ஸ் வந்தபோது அவ்வளவும், ஒன்பது A. தன்னை துரத்திய இனவாதத்திற்கு, ஸைனப் கொடுத்த முதலாவது செருப்படி அது. நாடே கொண்டாடுகிறது. அதன் பின் டாக்டர் ஷாபியை நாடே கொண்டாடியது வேறு கதை.
இப்போது ஸைனைபின் ஏ எல் ரிசேல்ட் வந்திருக்கிறது. தான் எப்படிப்பட்ட ஒரு பெண், யாருடை மகள், எப்படியான போராட்டக்காரி என்பதை இனவாத முகத்திற்கு முன்னால் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறாள். ஆங்கில மீடியத்தில், பயோ சயின்ஸ் படித்து , மூன்றும் A. District rank 12. மருத்துவ பீடத்தை தெரிவு செய்யும் கட் ஓப் ரேங்கிற்கு மேலே இருக்கிறார். வாழ்த்துக்கள்.
தான் விரும்பியது போல வைத்தியராகி, தனது தந்தையை குற்றவாளியாக சித்தரித்து, தங்களது குடும்பத்தை சீரழித்த எல்லோருக்கும் முன்னால், தானும் ஒரு வைத்தியராக தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது ஆசையின் முதல் படி இப்போது நிறைவேறி இருக்கிறது.
வாழ்த்துக்கள் ஸைனப்
-Arshath Ahamed-