மாளிகைக்காடு செய்தியாளர்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லக்ஸ்டோ வலையமைப்பு மற்றும் அகில இலங்கை ஐக்கிய மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் மகளிர் பற்றிய சட்டங்கள், குற்றங்கள், பாதிப்பு மற்றும் போதைப் பொருளால் சீரழியும் குடும்பங்கள் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் கவியரங்கு மரநடுகை என்பன அடங்கிய “சங்கமம்” நிகழ்ச்சி சனிக்கிழமை (08) மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
லக்ஸ்டோ வலையமைப்பின் பிரதானியும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், தேசிய சமாதான நீதிபதிகள் சபை தலைவருமான கலாநிதி ஏ.எல். அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகளிர் பற்றிய சட்டங்கள், குற்றங்கள், பாதிப்பு மற்றும் போதைப் பொருளால் சீரழியும் குடும்பங்கள் பற்றிய விழிப்புணர்வை காழி நீதவானும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எப்.எம். அன்சார் மௌலானா நிகழ்த்தினார்.
மேலும் பெண்களும், ஊடகமும் தொடர்பான விழிப்புணர்வை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை வானொலி கட்டுப்பாட்டாளரும், பிரதிப்பணிப்பாளருமான வஸீர் அப்துல் கையூம் நிகழ்த்தியதுடன் கவிதாயினி மாஜிதா தௌபீக் தலைமையில் கவிதாயிணிகளின் கவியரங்கம் நடைபெற்றது. இஃப்தார் சிந்தனையை மௌலவி எம்.எல்.எம். உஸ்மான் (நூரி) வழங்கினார்.
இதில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல். நூருல் ஹுதா, இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி. அன்வர், வரலாற்றாய்வாளர் ஜலீல் ஜீ, சூழலியலாளர் மின்மினி மின்ஹா உட்பட லக்ஸ்டோ அமைப்பின் நிர்வாகிகள், லக்ஸ்டோ சமூக சேவைகள் பிரிவு தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது “சங்கமம்” நிகழ்ச்சியின் நினைவாக அதிதிகளினால் மரக்கன்று நடப்பட்டது.