அமெரிக்கா, வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே ஃபிரஞ்ச் தெரிவித்துள்ளார்.
அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு முகாமைத்துவம் போன்ற திட்டங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உதவி இலங்கையின் வருடாந்த பாதீட்டு திட்டத்தில் சுமார் 12 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நாடு ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் நிதி மற்றும் ஈடுபாடு குறித்த பொதுவான மதிப்பாய்வை மேற்கொள்ள வேண்டுமென அறிவித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அமெரிக்கா தமது முடிவை மீள் பரிசீலனை செய்யும் என எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்கா உலக அமைப்பின் முன்னணி பங்காளி எனவும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யு.எஸ்.எய்ட்டின் நிதி முடக்கல் காரணமாக இலங்கையின் அரச துறையும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு முதல் இலங்கையில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் கைச்சாத்தானதாகத் தெரிவிக்கப்படுகிறது.