தேசிய பாதுகாப்பு பலவீனம், குற்றச்செயல்களை நிறுத்த இந்த அரசாங்கத்தால் முடியாது

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களால் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படை அதிருப்தியடைந்துள்ளன. இதனால் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்து வரும் அதேவேளை, பாதாள உலகக் குழுக்கள் மீண்டும் உயிர் பெற்று வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாட்டில் பல பகுதிகளிலும் தினந்தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. மித்தெனிய பிரதேசத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

தற்போது பாதாள உலகக் குழுவினர் உயிர் பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் சமூகத்தில் பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்து வருகிறது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அடிப்படை காரணிகள் இன்றி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருபோதும் இடமாற்றம் செய்யப்படவில்லை.

இதனால் பொலிஸாரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதனால் தமக்குரிய பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கான அர்ப்பணிப்பு அவர்கள் மத்தியில் குறைவடையக் கூடும். இதேவேளை மறுபுறத்தில் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரை பழிவாங்கும் படலங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தின் ஊடாகவும் நாட்டின் பாதுகாப்பு பலவீனமடைந்து கொண்டிருக்கிறது. தற்போது பழைய குற்றங்களுக்காக கடற்படையினரும் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்திய குழுவினர் பலவீனப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் பலவீனமடைவதால் தான் பாதாள உலகக்குழுவினர் தலைதூக்குகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரிக்குமே தவிர குறைவடையாது. அவற்றை நிறுத்தக் கூடிய இயலுமை இந்த அரசாங்கத்துக்கு இல்லை. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினரை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துக்கு அந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *