November 21, 2024
Home » News » மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம்!
1724981015-Parliment-2

மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்றக் கட்டமைப்பும் வகிபாகமும், சட்டவாக்க நடைமுறை, பாராளுமன்ற விவாதங்களின் முறைமை, பாராளுமன்றக் குழுக்களின் பணிகள் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்தல் என்பன தொடர்பில் இதன்போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

விசேடமாக, தெற்காசியாவின் சூழலில் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் ஏனைய சர்வதேச உடன்படிக்கைகளை அடைவதில் இலங்கை பாராளுமன்றம் கவனம் செலுத்தும் விதம் குறித்தும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குமார் லோபஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுப் பயணத்தில் குவைட் இராஜ்ஜியம், எகிப்து, அல்ஜீரியா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான நிலையத்தினால் (ICFJ) இந்த ஆய்வுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *