கிண்ணியா பிரதேச சபையுடன் ஜனநாயக பங்குதாரர்களை இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இடம்பெற்றுவரும் கூட்டத்தொடரின் மற்றுமொரு அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இவ்வேலைத்திட்ட அமர்வு ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒருமுறை இடம்பெற்றுவருகின்றது.
கிண்ணியா பிரதேச சபையின் ஜனநாயக பங்குதாரர்களான பொதுமக்கள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் போன்றவர்களுக்கிடையிலான புரிந்துனர்வை ஏற்படுத்தி பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் மாற்றத்தை கொண்டுவருவதே கிண்ணியா பிரதேச ஜனநாயக பங்குதாரர்கள் அமைப்பின் நோக்கமாகும்.
மேலும் இவ்வமைப்பினை வலுவூட்டும் வகையில் கிண்ணியா பிரதேச சபையின் 8 வட்டாரங்களிலிருந்து 2 பேர் வீதம் 16 நபர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் 5 இளைஞர்கள் மற்றும் 5 ஊடகவியலாளர்களும் என 26 நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
எதிர்வரும் காலங்களில் இவ்வமைப்பின் பிரதநிதிகளை உத்தியோகபூர்வமாக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கும் அடையாள அட்டையினை வழங்குவதற்குறிய ஏற்பாடு்கள் செய்யவுள்ளதாக AHRC நிறுவனத்தின் உதவி இணைப்பாளர் மதன் தெரிவித்தார்.
இக்கூட்டத் தொடரின்போது அந்தந்த வட்டாரங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன்போத கிண்ணியா பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், AHRC – ஜனநாயக பங்குதாரர்கள் வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் மற்றும் AHRC நிறுவனத்தின் உதவி இணைப்பாளர் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏ.ஆர். பஹ்மீர்