கிண்ணியா கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதான காணி தொடர்பாக கச்சக்கொடிதீவு வில்வெளி பிரதேசத்தை தனி நபர் ஒருவருக்கும், கச்சக்கொடிதீவு ஹீரோ விளையாட்டுக் கழக செயலாளருக்கும் இடையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த காணிக்குள் திடீரென நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது நீதிமன்றங்கள் ஏப்ரல் பருவ கால விடுமுறை என்பதாலும், எதிர்வரும் நாட்கள் அரச விடுமுறைகள் இருப்பதனாலும் குறித்த காலத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி குறித்த மைதான காணிக்குள் சட்டவிரோதமாக கட்டிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் வழக்கின் எதிராளி-மனுதாரரான கச்சக்கொடிதீவு விளையாட்டுக்கழக செயலாளர் தில்ஷான் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி நளீஜ் அவர்கள் மூலம் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு விஷேட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுக்குமாறு கோரப்பட்டது.
இவ்வாறான நிலையில் இவ்வழக்கின் அவசர தன்மையினை கருத்தில்கொண்டு குறித்த வழக்கினை இன்றைய விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் கச்சக்கொடிதீவு, விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து கட்டிடம் அமைக்க முற்பட்ட குறித்த நபருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று கட்டாணை எனப்படும் தடைக்கட்டளை பிறப்பித்துள்ளது.
குறித்த கட்டளையில் வழக்காளி-எதிர்மனுதாரர் அவரின் கீழ் தங்கி வாழ்வோர், அவரின் பிரதிநிதிகள் எவரும் குறித்த காணிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது என்றும் கட்டிட அபிவிருத்தி பணிகள் எதையும் மேற்கொள்ள கூடாது என்றும், விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் அமைதியான உடமையினை குழப்பக் கூடாது என்றும் கடடாணை தடைக்கட்டளை பிறப்பித்துள்ளது.
குறித்த கட்டளை எதிர் வரும் 2025.04.23 ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற இருக்கும்தினம் வரை வலுவிலிருக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நீதிமன்ற கட்டளை திருகோணமலை மாவட்ட நீதிமன்ற கட்டளை சேவகரினால் குறித்த அத்துமீறி கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு சேர்பிக்கப்ப்ட்டதுடன், அம்மைதான காணியிலும் பகிரங்கமாக ஒட்டப்பட்டது.