நூருல் ஹுதா உமர்
அண்மையில் பேசுபொருளாகிய கல்முனையில் அடிப்படைவாதம் அல்லது தீவிரவாதம் உருவெடுக்கிறது எனும் குற்றச்சாட்டு தொடர்பில் கல்முனையின் தாய்ப்பள்ளிவாசலான முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபை பல கட்ட முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.
அந்த வகையில் இது விடயமாக இதுவரைக்கும் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெடுப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமாக கல்முனையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் அமைப்பினர்களுடனான பிரத்தியேக கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை 16-03-2025 அன்று நண்பகல் 1.30 தொடக்கம் பி.ப 4.00 வரை ஆஷாத் ப்ளாசா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நிருவாகிகளும், அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஆ உலமா சபையினர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா – கல்முனைக் கிளையினர், மற்றும் முன்னணிசிவில் அமைப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர் .
மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் முக்கிய பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக இவ்விடயத்தினை பெரிய பள்ளிவசாலினது தலைமையில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் எனவும் இக்குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக ஊடகங்களில் குறிப்பிடப்படும் குழுவினை நேரடியாக அழைத்து அவர்களின் கொள்கைகள், பின்பற்றுதல்கள் தொடர்பில் கலந்துரையாடி அறிந்து ஆவணப்படுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்பின்னர் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஊர் தழுவிய ரீதியில் முன்னெடுத்தல் எனவும் ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டது.