மதுவரியை உயர்த்துவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 22ஆம் பிரிவின் கீழ் 2025/01 மதுவரி அறிவிப்பு, 1988ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் கட்டளை, 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் 112ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதி என்பன இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.
இதற்கமைய, 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழான கட்டளை மற்றும் (52வது அத்தியாயம்) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான 2025/01 மதுவரி அறிவிப்பு என்பனவும் குழுவில் கவனத்தில் எடுக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழான கட்டளையின் ஊடாக மோட்டார் வாகனம், சிகரெட், குளிர்பானம் மற்றும் புகையிலை உள்ளிட்ட ரூபாவின் பெறுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தி வரியின் கீழ் சகல பொருட்களுக்கான உற்பத்தி வரியை 5.9% அதிகரிப்பதற்கு இடமளிக்கின்றது என்றனர்.
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 22ஆம் பிரிவின் கீழ் 2025/01 மதுவரி அறிவிப்பு கீழ் மதுபானங்கள் மீதான மதுவரியை 5.9% இனால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.