நூருல் ஹுதா உமர்
BCMH நிறுவன பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தொழிலதிபர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் வழமை போன்று நோன்பாளிகள் நோன்பு திறக்கும் போது அருந்தும் கஞ்சிக்கான அரிசி வழங்கும் நிகழ்வு (02) அலி சப்றி றஹீம் அவர்களின் காரியாலயத்தில் இடம் பெற்றது.
அரிசிக்காக விண்ணப்பித்திருந்த 100 பள்ளிவாசல்களுக்கு முதற்கட்டமாக தலா 50 kg அரிசி கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை தலைவர் அஷ்ஷைக் பீ.எம். ஜிஃப்னாஸ் (மிஸ்பாஹி) உட்பட உறுப்பினர்கள், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவரும் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகருமான எம்.நிஜாம் (நளீமி ), அஷ்ஷைக் எம்.இசட்.எம்.சவ்கி (பஹ்ஜி) ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.
மேலும் புத்தளம் பந்து கழக (Ball Team) உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது உரையாற்றிய புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் உம்ரா கடமைக்கு செல்வதற்கு முன்னர் நாங்கள் சந்தித்த போது இதுபோன்ற பொதுநல வேலை திட்டங்கள் தொடர்ச்சியாக மக்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார். புத்தளம் மாவட்டத்தின் பல பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தனது பள்ளிவாசல்களுக்கான அரிசிகளை இதன்போது பெற்றுக்கொண்டனர்.