எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த விசேட கோரிக்கையின் பேரில் இலங்கையின் 8 மாவட்டங்களில் 56 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டிருந்தன.
அந்த நிதிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 8 கோடி 80 இலட்சம் ரூபாவும், மன்னார் மாவட்டத்துக்கு 7 கோடி ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 2 கோடி 80 இலட்சம் ரூபாவுடன் வவுனியா, புத்தளம் மாவட்டங்களுக்கும் நிதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்களை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தின் கணக்காளர் எஸ்.ஏ.பி.குமாரி 2024.08.15 ஆம் திகதி கடிதம் மூலம் நிதி அனுமதிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு எழுத்தில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தின் பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட 8 பேருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சஜித் பிரேமதாசவுக்கு ரிஷாத் ஆதரவு வழங்கியதன் காரணமாகவே இவ்வாறு இந்த நிதிகள் இடைநிறுத்தப்பட்டள்ளதாக ரிஷாத் பதியுதினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் அறிய முடிகிறது.