கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் குறித்த திறந்த கலந்துரையாடல்.

நூருல் ஹுதா உமர்.

‘கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் – திண்மக் கழிவு முகாமைத்துவ அணுகுமுறை’ எனும் தலைப்பிலான செயலமர்வும், திறந்த கலந்துரையாடலும் இன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பொறியியலாளர் கமால் நிஷாத் ஒருங்கிணைப்பில், சமூக அபிவிருத்திக்கான அமையம் ஏற்பாடு செய்த இக்கலந்துரையாடலில், கொழும்பு மாநகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ பொறியியல் பிரிவு பணிப்பாளரும், நிலைபேறான திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக, தென்கொரியாவில் நடைபெற்ற 2024 CityNet ESCAP SDG City  விருது பெற்றவருமான எந்திரி. சஹினா மைஸான் அவர்கள் இதில் வளவாளராக கலந்து கொண்டார்.  

கொழும்பு மாநகர சபை கழிவு முகாமைத்துவம் செய்வதில் கடந்தகாலங்களில் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட விதம் குறித்த விளக்கங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், கல்முனை மற்றும் அதனை அண்மித்த உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் எதிர்நோக்கும் சவால்கள், அவற்றுக்கான சாதகமான தீர்வுகள், மற்றும் இங்குள்ள நிறுவனங்கள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த கேள்வி பதிலுடன் கூடிய நிகழ்வாக இது அமைந்திருந்தது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் அத்துடன் கல்முனை, சாய்ந்தமருது உட்பட இப்பிராந்தியத்தைச் சேர்ந்த அரச, பொது மற்றும் தன்னார்வ அமைப்புகள் உட்பட ஊடக நிறுவன பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டதுடன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் பிரத்தியேக செயலாளரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *