பிபிசி செய்தி சேவையால் முதல் முறையாக வெளியிடப்பட்ட பயண வழிகாட்டி அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்லக்கூடிய முதல் 25 இடங்களில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலாத் துறை, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றும் கொவிட் தொற்று காரணமாக கடுமையான சரிவைச் சந்தித்தது.
இருப்பினும், இத்தகைய பின்னணியில், நாட்டின் சுற்றுலாத் துறையை உலகளவில் மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டதன் விளைவாக, கடந்த ஆண்டில் மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டில் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கு மேலும் நம்பிக்கையைச் சேர்க்கும் வகையில், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல சிறந்த 25 இடங்களில் ஒன்றாக இலங்கையை பிபிசி சமீபத்தில் பெயரிட்டது.
இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் உள்ளதுடன், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கிறது.
பிபிசி செய்தி சேவை இவ்வாறு சுற்றுலா செல்ல சிறந்த 25 இடங்களை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
சுற்றுலா ஊடகவியலாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வுகள், ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு மற்றும் உலக சுற்றுலா பேரவை உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அதிகாரிகளின் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பி.பி.சி நிறுவனம் இந்த புதிய அறிக்கையை வௌியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கையைப் பற்றி எழுதிய ஊடகவியலாளர் கிளேர் டர்ரெல், “இலங்கை மூடுபனி நிறைந்த மலை உச்சிகளில் அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், சுற்றித் திரியும் காட்டு யானைகள் முதல் பழங்கால கோயில்கள் மற்றும் மோதும் அலைகள் வரை ஏராளமாக கொண்டுள் நாடு” என்று அறிமுகப்படுத்தினார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி, கொவிட் தொற்று மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சுற்றுலா மூலம் மீள்தன்மை கொண்ட தீவு நாடாக மீண்டும் தனது சொந்த காலில் முன்னேறுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தனது குறிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் ரயில் பயணம், சுற்றுலா பயணத்தின் மகிழ்ச்சியான அனுபவம், சுயமாக இயக்கப்படும் முச்சக்கரவண்டி பயணங்கள், புதிய விமான சேவைகள், புதிய ஹோட்டல் வளாகங்கள் மற்றும் இலங்கையர்களின் வரலாற்று விருந்தோம்பல் ஆகியவற்றின் அழகான அனுபவங்களை பிபிசி அங்கீகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.