October 4, 2024
img_1144-1-780x468.jpg

மொஹமட் பாதுஷா

தேர்தலை நடத்த முனைவது போல் வெளியில் காட்டிக்கொண்டு மறைமுகமாக அதனை தாமதப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதையும் காண்கின்றோம். ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒரு சூழலில், ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்றப் பொதுத் தேர்தலையும் எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிக்க முடியும்?

ஆகவே, இன்னும் சில மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தேர்தலுக்கு நாடு சென்றேயாக வேண்டிய நிலை இருக்கின்றது.

இல்லாவிட்டால், இப்போது நாட்டில் முடுக்கிவிடப்பட்டுள்ள குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும் என்பதே நமது அனுமானமும் அனுபவமும் ஆகும்.

இந்தக் காலப் பகுதியை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும்.

எம்.பிக்களும் தமக்கிடையே உரையாடல்களை நடத்தி சமூகத்தின் அபிலாஷைகள் குறித்த ஒரு கட்டமைக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு வரமுடியும்.

சமூகம் சார்ந்த கோரிக்கைகளைக் கூட்டாக, அரசாங்கத்திடம் முன்வைத்துப் பேசமுடியும். அவற்றுள் ஒரு சிலவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள இருக்கின்ற காலத்தை உபயோகப்படுத்த முடியும்.

அப்படிச் செய்தால், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது கடைசிக் காலத்திலாவது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ததாகத் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.

ஒருவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அரசாங்கமோ முஸ்லிம் அரசியல் தரப்பின் கோரிக்கைகளுக்குக் கொஞ்சம் கூட செவிசாய்க்கவில்லை என்றால், நாம் மாற்றுத் தெரிவுகளை நோக்கி நகர முடியும். ஏனைய பெருந்தேசியக் கட்சிகள், வேட்பாளர்களிடம் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் பற்றிப் பேசி, ஆதரவளிக்கும் முடிவை எடுக்கலாம்.

ஆனால், அப்படி எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. இனிமேல் நடக்கும் என்ற அறிகுறிகளும் தென்படவில்லை என்பதுதான் கவலைக்குரியது.

கடந்த காலங்களைப் போல, எந்தப் பேச்சுவார்த்தைகளும், எந்த கோரிக்கைகளும், எந்த உடன்பாடுகளும், எந்தவிதமான ஒப்பந்தங்களும் இன்றி இம்முறையும் கூட்டுச் சேர்வதற்கே முஸ்லிம் அரசியல் அணிகள் பிரயாசைப்படுவதாக தெரிகின்றது.

ஒரு சமூகம் சார்ந்த அரசியல் கட்சி தலைவர்கள். முஸ்லிம் சமூகத்தின் காவலர்கள் எனச் சொல்லிக் கொள்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித பேச்சுக்களும் இன்றி,நிபந்தனைகளும் இன்றி எந்த பெருந் தேசிய கட்சிக்கும் வேட்பாளருக்கும் இனிமேலும் ஆதரவளிக்க முடியாது.

முஸ்லிம் சமூகம் நன்றிக் கடனாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கண்ணை மூடிக்கொண்டு எந்தக் கட்சியையும், ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்க வேண்டியதும் இல்லை, நிராகரிக்க வேண்டியதும் இல்லை. ஆனால், அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்போது பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. எனவே, முஸ்லிம் கட்சிகள், அரசியல் அணிகள் ஒரு கூட்டமைப்பாக வரவேண்டியதில்லை. அது நடைமுறைச் சாத்திமும் இல்லை என்பது கடந்த காலத்தில் நிரூபணமாகி விட்டது.

ஆயினும், பிரதான முஸ்லிம் கட்சிகளாவது ஒரே மேசையில் அமர்ந்து குறைந்த பட்சம் தமது சமூகத்தின் பிரச்சினைகள், கோரிக்கைகளைப் பேசி,அவற்றை உத்தேச வேட்பாளரான ஜனாதிபதியிடம் முன்வைத்தால், அது ஒரு பலம் பொருந்திய கோரிக்கையாக அமையும். அவற்றுள் சில பிரச்சினைகளையாவது அரசாங்கம் தீர்த்து வைக்க முயற்சிக்கலாம்.

ஜனாதிபதியோ அல்லது வேறு ஒரு வேட்பாளரிடம் கோரிக்கையை முன்வைத்து, அதற்கு அவர் இணங்காத விடத்து, நாங்கள் மாற்றுத் தெரிவுகளை எடுப்போம் என்ற செய்தியை முன்கூட்டியே சொல்ல முடியும். அதைவிடுத்து, அவசரப்பட்டு, எந்த பேச்சுமின்றி பின்கதவால் உறவுகொண்டு ஆதரவளிப்பதும், எதிர்ப்பதும் மிக மோசமான அரசியலாகும்.

அதுதான் இந்த முறையும் முஸ்லிம் அரசியல் பரப்பில் நடந்து கொண்டிருக்கின்றது. கட்சித் தலைவர்களுக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் உள்ளன. அத்துடன், பல எம்.பிமாருக்கு பெருந்தொகை நிதி வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. வீதிகள், கட்டிட நிர்மாணங்கள், உதவித் தொகைகளாக இவை பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இன்னுமொரு கூட்டம் பதவிகளுக்குப் பின்னால் அலைகின்றது.

அதாவது, சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைத்துப் பேசி, ஒரு நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவளிக்க வேண்டும் என்று சமூகம் கோரி நிற்கின்ற சூழலில், முஸ்லிம் தரப்புக்கள் தமக்கிடையே ஒன்றுகூடிப் பேசவும் இல்லை. பெருந் தேசியக் கட்சிகள், உத்தேச வேட்பாளர்களும் உருப்படியான கோரிக்கைகளை முன்வைக்கவும் இல்லை.

மாறாக, நிதி ஒதுக்கீடுகளுக்காகவும் எதிர்கால பதவிகளை இலக்கு வைத்தும் தீர்மானங்கள் எடுக்கப்படுவதையும், இந்தப் புள்ளியில் கட்சித் தீர்மானமும் அக்கட்சியின் எம்.பியின் தீர்மானமும் வேறுபடலாம் என்பதையும் நாம் அறியாதவர்களல்லர். அதுமட்டுமன்றி, ‘உதவி வழங்கிய’ தரப்பைத்தான் இவர்கள் ஆதரிப்பார்கள் என்பதும் நிச்சயமில்லை.

அந்த வரிசையில், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் முன்னமே முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் எம்.பிக்களும் அவசரப்படுவதைக் காண்கின்றோம். யார் நிச்சயிக்கப்பட்ட வேட்பாளர்,அவரது கொள்கை, தேர்தல் விஞ்ஞாபனம் என்ன? என்பதை இவர்கள் அறியமாட்டார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள், அபிலாஷைகள், நிலைப்பாடுகள் குறித்து முஸ்லிம் அரசியல் அணிகள் கூடிப் பேசி ஒரு முடிவை எடுக்கவில்லை. அதுமட்டுமன்றி, ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் அணியும் தமது சொந்தக் கட்சிக்குள்ளேயே யாரை ஆதரிப்பது என்பது குறித்த ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர முடியாத கையறு நிலை காணப்படுகின்றது.

எது எவ்வாறிருப்பினும், பிரதான முஸ்லிம் கட்சிகள் எந்தவித மக்கள் சார்பு உடன்பாடும் இன்றி யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு அவசரக் குடுக்கைத்தனமாக நகர்வுகளைச் செய்வதைக் காணமுடிகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

உத்தேச வேட்பாளர்களுடன் பேசி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளாமலோ அல்லது ‘தான் பதவிக்கு வந்தால் இந்த இந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம்’ என்ற உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளாமலும் தன்னார்வமாக ஓடிப்போய் ஆதரவளிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

அதேபோல், தேர்தலும், அதற்கான வேட்பாளர்களும் இன்னும் உத்தியோகபூர்மாக அறிவிக்கப்படாத நிலையில், தம்மை ஒரு குறிப்பிட்ட கட்சியின் அமைப்பாளராக, செயற்பாட்டாளராக, ஆதரவாளராக, முட்டுக் கொடுப்பவராக முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் காண்பிக்க முனைவதால் சமூகத்திற்குக் கிடைக்கப் போகின்ற நன்மைகள் என்னவென்று அவர்கள் சொல்வார்களா?

தமிழ்ச் சமூகத்தில் முஸ்லிம் சமூகத்தை விட அதிக பிளவுகள், பாகுபாடுகள் உள்ளன என்பதே நிதர்சனமாகும்.

ஆனால் அதனையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு சமூகத்தின் பிரச்சினைக்காக ஒரே மேசையில் அமர்ந்து அவர்கள் பேசுகின்றார்கள். இந்த நிலைமை முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாக வேண்டும்.

முஸ்லிம் அரசியல் தரப்புகளும் அவசிமேற்பட்டால் சிவில் தரப்புக்களும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். இந்தப் ‘பூனைக்கு யாராவது மணிகட்ட’ முன்வருவதும் காலத்தின் அவசியமாகும். அதைவிடுத்து, ‘இவர் வெல்வார்’ என்ற அனுமானத்தின் அடிப்படையிலோ, கொந்தராத்துக்களை மேற்கொள்வதற்காக எம்.பிக்களுக்கு தரப்படும் பணத்திற்காகவோ, அவர்களுக்குக் கொடுக்கப்படும் வெகுமதிகளுக்காகவோ அல்லது எதிர்காலத்தில் அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற கனவுக்காகவோ, நிபந்தனையற்ற ஆதரவளிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அடகு வைக்கக் கூடாது.

அப்படி ஒரு கேடுகெட்ட அரசியல் செய்வதை விட, தேர்தலில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை நேரடியாக மக்களிடம் கொடுத்துவிட்டு, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பிழைப்பைப் பார்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அதனை வரவேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *