October 2, 2024

எம்.ஏ.எம். பௌசர்

23.09.2024

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது. புதிய ஜனாதிபதியும் தனது பொறுப்புக்களை ஏற்றுள்ளார். புதிய ஜனாதிபதியின் தெரிவு சட்டரீதியானது என்பதில் எந்த ஐயமுமில்லை. எனினும் இலங்கை ஜனாதிபதித் தெரிவு முறையின், விருப்பு வாக்கு முறையிலுள்ள குறைபாடு ஜனநாயக விழுமியங்களை மீறுவதாக உள்ளது. அது குறித்த சில அவதானங்களை இக்கட்டுரை அலசுகிறது.

ஜனநாயகம் என்ன சொல்கிறது?

பெரும்பான்மை வாக்காளார்களின் ஆதரவினைப் பெற்றவரே ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது நவீன பிரதிநிதித்துவ ஜனநாயக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவங்களுள் ஒன்று. குடிமக்களை ஆளுகிறவர்கள் பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவினைப் பெற்றிருக்க வேண்டும். எமது புரிதலுக்காக இங்கு பெரும்பான்மை என்பதனை குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கு மேற்பட்டது (50% + 1) என எடுத்துக்கொள்ள முடியும். அதாவது குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஆதரவினைப் பெறுகின்றவரே ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய ஒருவரினாலேயே பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயங்களைப் பிரதிபலிக்கமுடியும்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முறை எத்தகையது?

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கு அறுதிப் பெரும்பான்மை முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையின் பிரகாரம் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்ட (50 சதவீதத்திற்கு மேல்) வாக்குகளைப் பெற்றவர் ஜனாபதியாகத் தெரிவு செய்யப்பட முடியும். இது பெரும்பான்மையினர் விருப்பினை தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு ஏற்பாடாகும். எனினும் முதலாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்பில், எந்த வேட்பாளர்களும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட (50% + 1) வாக்குகளைப் பெறத் தவறுகின்ற போது, இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்பிற்கு செல்ல வேண்டி ஏற்படுகிறது. இங்குதான் பெரும்பான்மையினர் விருப்புத் தொடர்பான நெருக்கடி எழுகிறது.

இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்பு எவ்வாறு இடம்பெறுகிறது?

முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும். முதல் சுற்று வாக்குக் கணக்கெடுப்பில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற வேட்பாளர்கள் போட்டிக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுக்களில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற வேட்பாளர்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதா என்ற விடயம் பரிசீலிக்கப்படும். அவ்வாறு பரிசீலிக்கப்பட்டு முதலிரு வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட விருப்பு வாக்குகள் அவர்கள் முதல் சுற்றில் பெற்றுக்கொண்ட வாக்கு எண்ணிக்கையுடன் சேர்க்கப்படும். பின்னர் முதலிரு வேட்பாளர்கள் இருவரில் யார் பெரும்பான்மையினைப் பெறுகின்றாறோ அவர் ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தப்படுவார்.

இரண்டாம் – மூன்றாம் விருப்பு வாக்குகள் எப்போது கவனத்திற்கொள்ளப்படுகிறது?

ஜனாபதித் தேர்தல் ஒன்றில் மூன்று வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகின்றபோது, போட்டியிலுள்ள முதலிரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்ட இரண்டாம் விருப்பத் தெரிவு கவனத்திற்கொள்ளப்படும். ஆனால் குறித்த தேர்தலில் மூன்றிற்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றபோது மூன்றாவது விருப்பு வாக்கும் கவனத்திற்கொள்ளப்படும்.

முதல் சுற்றில் முதலிரு இடங்களைப் பெற்ற வேட்பாளர்களுக்கு விருப்பத் தெரிவுகளை பெற்றுக் கொடுக்கும் போது, போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுக்கள் ஒவ்வொன்றாக பரிசீலிக்கப்படும். அவ்வாறு பரிசீலிக்கும்போது போட்டியிலிருந்து நீக்கப்படும் ஒரு வேட்பாளரின் வாக்குச் சீட்டில், இரண்டாம் விருப்பத் தெரிவு, போட்டியில் முதல் நிலையில் உள்ளவருக்கும், மூன்றாவது விருப்பத் தெரிவு போட்டியில் இரண்டாம் இடத்தில் உள்ள வேட்பாளருக்கும் வழங்கப்பட்டிருப்பின் இரண்டாவது விருப்பத் தெரிவு மட்டுமே கருத்திற் கொள்ளப்படும். இச்சந்தர்ப்பத்தில் மூன்றாம் விருப்பு வாக்குக் கருத்திற் கொள்ளப்படுவதில்லை.

மாற்றமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வேட்பாளரின் வாக்குச் சீட்டில், இரண்டாம் விருப்பத் தெரிவு, போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பிறிதொரு வேட்பாளருக்கு வழங்கப்பட்டிருப்பின், அவரது வாக்குச் சீட்டிலுள்ள மூன்றாவது விருப்பத் தெரிவு பரிசீலிக்கப்படும். அவ்வாறு பரிசீலிக்கும்போது மூன்றாவது விருப்பத் தெரிவு, இரண்டாம் சுற்றுப் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள முதலிரு வேட்பாளர்களுள் யாராயினும் ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பின் மூன்றாம் விருப்பத் தெரிவு வாக்கு உரிய வேட்பாளருடைய முதல் சுற்று வாக்குகளுடன் சேர்க்கப்படும்.

இரண்டாம் சுற்றுக் கணக்கெடுப்பில் வாக்கு எண்ணிக்கை சமனிலையில் முடிந்தால் என்ன செய்வது?

இரண்டாம் சுற்றில் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் கணக்கிடப்பட்டு, முதலிரு வேட்பாளர்களும் முதல் சுற்றில் பெற்ற வாக்குகளுடன் அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் (முதல் சுற்று வாக்குகள் + விருப்பு வாக்குகள்) சேர்க்கப்படும். பின்னர் இருவருள் பெரும்பான்மை பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.

எனினும் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் சமனிலையில் காணப்படும்போது, திருவுளச் சீட்டின் மூலம் வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார். இதனை நாம் மூன்றாம் சுற்று கணக்கெடுப்பு என்றும் கருதாலம். அதாவது திருவுளச் சீட்டில் தெரிவு செய்யப்படுபவருக்கு மேலதிகமாக ஒரு வாக்கு அளிக்கப்பட்டு பெரும்பான்மை உறுதிசெய்யப்படும்.

இலங்கையின் 2024 ஜனாதிபதித் தேர்தலில் என்ன நடந்தது?

இலங்கையில் 21.09.2024 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் (மரணித்த ஒரு வேட்பாளர் தவிர்ந்த). முதல் சுற்று வாக்குக் கணக்கெடுப்பில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்கினைப் பெறத்தவறியிருந்தனர். அதிக பட்சமாக தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 42.31 சதவீத வாக்குகளும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரமேதாச 32.76 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் முதலிருவரையும் விட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தனர். இதனால் முதல் சுற்றில் ஜனாதிபதியினைத் பிரகடனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டாம் சுற்றில் விருப்பு வாக்குகள் எப்படிக் கணக்கிடப்பட்டன?

தேர்தல் முறையின் பிரகாரம், இரண்டாம் சுற்றுக் கணக்கெடுப்பிற்காக அனுர குமார திசாநாயக்க, சஜித் பிரமேதாச ஆகிய இருவரும் முதலிரு போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டு, ஏனைய 36 வேட்பாளர்களும், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்களாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.

பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட 36 வேட்பாளர்களினதும் வாக்குச் சீட்டுக்கள் பரிசீலிக்கப்பட்டது. அவ்வாறு பரிசீலிக்கும் போது, நீக்கப்பட்ட 36 வேட்பாளர்களினதும் வாக்குச் சீட்டுக்களில் அனுர குமார, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இரண்டாம், மூன்றாம் விருப்பத் தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளதா என்ற விடயம் கருத்திற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதல் விருப்பு வழங்கப்பட்ட வாக்குச் சீட்டொன்றில், இரண்டாம் விருப்புத் தெரிவு அனுர குமார திசாநாயக்கவுக்கும் மூன்றாம் விருப்பத் தெரிவு சஜித் பிரமேதாசாவுக்கும் வழங்கப்பட்டிருந்தது எனின், இரண்டாம் விருப்பத் தெரிவு ஒரு வாக்காகக் கருதப்பட்டு அந்த வாக்கு அனுர குமார திசாநாயக்க ஏற்கனவே முதல் சுற்றில் பெற்றிருந்த வாக்குகளுடன் சேர்க்கப்படும். இந்த சந்தர்ப்பத்தில் மூன்றாம் விருப்பத் தெரிவு கருத்திற்கொள்ளப்படுவதில்லை.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதல் விருப்பத் தெரிவு வாக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டொன்றில் இரண்டாம் விருப்பத் தெரிவு நாமல் ராஜபக்ஸவுக்கும் மூன்றாம் விருப்பத் தெரிவு சஜித் பிரேமதாசாவுக்கும் வழங்கப்பட்டிருந்தது எனின், இங்கு மூன்றாம் விருப்பத் தெரிவு கருத்திற் கொள்ளப்பட்டு அந்த வாக்கு சஜித் பிரமேதாச முதல் சுற்றில் பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் சேர்க்கப்படும். இவ்வாறுதான் இரண்டாவது சுற்றில் வாக்குக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மூன்றாவது விருப்பத் தெரிவினைக் கணக்கிடுவதற்காக மூன்றாவது சுற்றுக் கணக்கெடுப்பு ஒன்றுக்கு செல்வதில்லை.

விருப்பு வாக்குக் கணக்கெடுப்பினூடாக வெற்றியாளர் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டார்?

முதல் சுற்றில் அனுர குமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளும் சஜித் பிரமேதாச 4,363,035 (32.76%) வாக்குகளும் பெற்றிருந்தனர். அதாவது அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு (50%) மேற்பட்ட வாக்கினை எவரும் பெறவில்லை. ஆதலால் இரண்டாம் சுற்றில், அவர்கள் இருவருக்கும் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் அளிக்கப்பட்டுள்ள இரண்டாம், மூன்றாம் விருப்பத் தெரிவுகள் கணக்கிடப்பட்டது.

இரண்டாம் சுற்றுக்கணக்கெடுப்பில், போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுக்களில், அனுர குமார திசாநாயக்காவுக்கு 105,264 விருப்பத் தெரிவு வாக்குகளும் சஜித் பிரமேதாசவுக்கு 167,867 விருப்பு வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்த வாக்குகள் இவ்விரு வேட்பாளர்களும் முதல் சுற்றில் பெற்றுக்கொண்ட வாக்குகளுடன் கூட்டப்பட்டது. இதன்படி அனுர குமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 5,740,179 (5,634,915 + 105, 264) எனவும் சஜித் பிரமேதாச பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 4,530,902 (4,363,035 + 167,867) எனவும் தீர்மானிக்கப்பட்டது (https://results.elections.gov.lk/).

அதன் பின்னர், அனுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரமேதாச ஆகியோரது மொத்த வாக்குகள் ஒப்பீடு செய்யப்பட்டு இரு வேட்பாளர்களிலும் அனுர குமார திசாநாயக்க பெரும்பான்மையினைப் பெற்றிருப்பதால் அவர் பெற்றியாளர் என தேர்தல் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கிணங்க, இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தனது பதவியினை இன்று பிரதம நீதியரசர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அவர் தெரிவு செய்யப்பட்ட முறை சட்டரீதியானது என்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஜனநாயகத் தத்துவம் எப்படி மீறப்பட்டுள்ளது?

இலங்கையில் தமது வாக்குரிமையினை முறையாகப் பயன்படுத்திய பெரும்பான்மை வாக்காளர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவினை ஆதரவிக்கவில்லை என்பதனையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. முதல் சுற்றில் ஜனாதிபதி பெற்றுக்கொண்ட வாக்குகள் 42.31 சதவீதம் மட்டுமே. 57.69 சதவீத வாக்குகள் அவருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம், மூன்றாம் விருப்பத் தெரிவுகள் சேர்க்கப்பட்டு பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும் வாக்காளர்களின் பெரும்பான்மை அபிப்பிராயத்தினை தெளிவாகப் பிரதிபலிப்பதாக அமையவில்லை. அதாவது இரண்டாம் சுற்றில் பெறப்பட்ட வாக்குகளின் சேர்க்கையுடனான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையினைப் பார்க்கிறபோது, 75,79,437 வாக்குகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளது.

எனவே பெரும்பான்மை வாக்காளர்கள் விரும்பாத, போட்டியிட்ட வேட்பாளர்களுள் அதிகூடிய வாக்கினைப் பெற்ற ஒருவரே இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை நாம் அரசியல் கண்ணோட்டத்தில் சிறுபான்மை ஜனாதிபதி என அழைக்கலாம். இங்கு சிறுபான்மை என்பது இலங்கையின் சிறுபான்மை – பெரும்பான்மை இனத்துவ வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும். மாற்றமாக வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதி சிறுபான்மை ஆதரவுபெற்ற ஜனாதிபதி எனப்பொருள் கொள்ளப்படலாம்.

எங்கு தவறு நடந்திருக்கிறது?

இலங்கையின் தற்போதைய ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பு வரையப்பட்டபோது, பிரான்சிய, அமெரிக்க மாதிகள் கருத்திற்கொள்ளப்பட்டது. இலங்கையில் ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கு பிரான்சிய மாதிரியினை ஒத்த தேர்தல் முறையே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவினால் அறிமுகம் செய்யப்பட்டது.

இம்முறையில் முதல் சுற்று வாக்குக் கணக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதி தெரிவு செய்யப்படும்போது, பெரும்பான்மை விருப்பு தெளிவாகப் பிரதிபலிக்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஜனாதிபதியினைத் தெரிவு செய்யமுடியாத விடத்து, இரண்டாம், மூன்றாம் விருப்புத் தெரிவுகளை கணக்கிட்டு ஜனாதிபதியினைத் தெரிவு செய்ய இடமளிக்கப்பட்டுள்ளது. இதன்போது பெரும்பான்மையினர் விருப்புக் கருத்திற்கொள்ளப்படுவதில்லை.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தவிர்ந்த, இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளைக் கணக்கிடும் சந்தர்ப்பங்கள் இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பரீட்சித்துப்பார்ப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை.

பிரான்சிலும் இலங்கை தேர்தல் முறைதான் நடைமுறையிலுள்ளதா?

இலங்கை போலல்லாது பிரான்சில் ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கு இரு சுற்று வாக்களிப்பு முறையினைப் பின்பற்றுகின்றனர். அதாவது முதலாவது சுற்று வாக்களிப்பில் அறுதிப் பெரும்பான்மையினை (50 சதவீதத்திற்கு மேல்) பெறுவதற்கு எந்தவொரு வேட்பாளரும் தவறும் பட்சத்தில், இரண்டாம் சுற்று வாக்களிப்பு இடம்பெறும்.

இங்கு இரண்டாம் சுற்று வாக்களிப்பு என்பது இரண்டாவது தேர்தல் என புரிந்துகொள்ளலாம். ஆனால் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் முதல் சுற்றில் முதலிரு இடங்களைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடமுடியும். இரண்டாம் சுற்று வாக்களிப்பு முதல் சுற்று வாக்களிப்பு இடம்பெற்று, சில வாரங்களின் பின்னரே இடம்பெறும்.

இரண்டாம் சுற்றுக்கான வாக்குச் சீட்டில் முதல் சுற்றில் பெரும்பான்மை பெற்ற இரு வேட்பாளர்களினது பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இரண்டாம் சுற்று வாக்களிப்பின் பின்னர் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு, அறுதிப் பெரும்பான்மையினை (50 சதவீதத்திற்கு மேல்) பெறும் வேட்பாளர் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். இம்முறையில் பெரும்பான்மை வாக்காளர்கள் விரும்பாத ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை.

சில சந்தர்ப்பங்களில் முதல் சுற்றில் முன்னணியில் இருந்த வேட்பாளர், இரண்டாம் சுற்றில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்கினைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை இழக்கமுடியும். எனினும் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட முடியும் என்பதனை பிரான்சிய தேர்தல் முறை உறுதிசெய்கிறது.

பிரான்சில் 2022 ஏப்ரலில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிட்டனர். அவர்களுள் எவரும் முதல் சுற்று வாக்களிப்பில் அறுதிப் பெரும்பான்மையினைப் பெறவில்லை (இமானுவல் மெக்ரன் 27.9% – மெரைன் லீ பென் – 23.2%). அச்சந்தர்ப்பத்தில் முதலிரு இடங்களைப் பெற்ற பிரான்சின் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மெக்ரன், மெரைன் லீ பென் ஆகியோரினுள் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெற்றது.

இரண்டாம் சுற்றுத் தேர்தலில் இமானுவல் மெக்ரம் 58.5 சதவீத வாக்குகளையும் மெரைன் லீ பென் 41.5 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். இதன்படி இமானுவல் மெக்ரன் அறுதிப் பெரும்பான்மையினை உறுதிசெய்ததன் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

நாம் என்ன செய்வது?

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்புத் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்தகைய அரசியலமைப்பினை மாற்றியமைக்கிறபோது, இலங்கையின் தேர்தல் முறைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும். பெரும்பான்மை வாக்காளர்கள் விரும்புகின்றவர்கள் ஆட்சியாளர்களாக தெரிவு செய்யப்படும் ஒரு முறையின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை, சட்டவாக்க அமைப்புக்களில் மாற்று அபிப்பிராயங்களை முறையாகப் பிரதிபலிக்கக்கூடிய தேர்தல் முறைமையொன்றாக தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரப் பிரதிநித்துவ முறை (பாராளுமன்றத் தேர்தல் முறை) உள்ளது. எனினும் அங்குள்ள விருப்பு வாக்குமுறை தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவையும் சீர்செய்யப்பட வேண்டும்.

இம்முறை தேர்தல் முடிவுகளினுாடாக பாராம்பரிய அரசியல் கட்டமைப்புக்களிலும் கலாசாரத்திலும் மக்கள் பெறுப்புற்றுள்ளதனை அறியமுடிகிறது. பெரும்பான்மை இனத்தவர் – சிறுபான்மை இனத்தவர் என்ற அரசியல் கோசங்களுக்கு வாக்காளர்கள் செவிசாய்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியினை நோக்கிய, ஒரு முறைமை மாற்றத்தினை அவர்கள் எதிர்பார்த்துள்ளனர் என்பது தெளிவாகிறது. அதற்கான உறுதிமொழிகளை வழங்கியே புதிய ஜனாதிபதியும் பதவிக்கு வந்துள்ளார். புதிய ஜனாதிபதி ஆயிரத்தினுள் ஒருவராக இருந்து விட்டுச் செல்லாமல், இலங்கையில் வாழும் அனைத்தின மக்களுக்கும் பங்கமில்லாத ஜனநாயக அரசியல் மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி, நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரு தலைவராக மிளிர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *