October 3, 2024
438259675_2717233095105194_3541691907933946293_n

சிராஜ் மஷ்கூர்

1982 இல் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது எனக்கு 9 வயது. எங்கள் ஊருக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன, டென்ஸில் கொப்பேகடுவ, றோஹன விஜேவீர ஆகிய முதன்மை வேட்பாளர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்.

சிறிமாவின் குடியுரிமையை அப்போது ஜே.ஆர் பறித்திருந்தார். சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட கொப்பேகடுவவுடன் சிறிமாவும் ஊருக்கு வந்திருந்தார். சிறுபிள்ளையாக இருந்த நான், அப்போது எல்லாக் கூட்டங்களுக்கும் புதினம் பார்க்கப் போயிருந்தேன். வேட்பாளர்களை முதன்முறையாக நேரில் கண்டேன்.

1988 தேர்தல் நாடெங்கிலும் பெரும் வன்முறைக்கும் குழப்பத்திற்கும் மத்தியில் இடம்பெற்றது. ஒருபுறம் தெற்கில் சிங்கள இளைஞர்களின் கொதிப்பும் கிளர்ச்சியும் என்றால், மறுபுறம் வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்களின் போராட்டம். இரண்டையுமே நேரில் கண்டு அனுபவித்த தலைமுறையின் பிரதிநிநி நான்.

அப்போது 15 வயது மாணவனான எனக்கு அந்தத் தேர்தல் ஏற்படுத்திய அதிர்வலைகள் சொல்லி மாளாதவை. திரும்பும் பக்கமெல்லாம் கொலைகள், உயிரிழப்புகள், பேரழிவு…
ரணசிங்க பிரேமதாஸ அதில் முறையாக வெற்றி பெறவில்லை என்று கூட அப்போது பேசப்பட்டது. அவர் 50.43% வாக்குகளையே பெற்றார்.

1994 ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா அலை பாரியளவு வீசியது. வேறெந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வேட்பாளர்கள் எவரும் பெற்றிராத 62.28% வாக்குகளை, அவர் அப்போது பெற்றார். 2010 இல் யுத்த வெற்றியின் பின்னர் மஹிந்த கூட 57.88% தான் பெற்றார்.

1994 தேர்தல் ஒரு பெரும் திருப்புமுனை. அதில் UNPயின் 17 வருட ‘சாபத்தை’ முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பேச்சு பரவலாக இருந்தது.

அந்தத் தேர்தலில் எனது பெரியப்பா.

1994 இல் சந்திரிக்காவின் வெற்றியின் பின்னர், போரை விட சமாதானமே முதன்மையான பேசுபொருளாக இருந்தது. மறைந்த மு.கா.தலைவர் அஷ்ரஃபின் ‘பொற்காலமாக’ அது இருந்தது. ஆனால், 1999 இல் சந்திரிக்கா மீதிருந்த ‘சமாதான தேவதை’ பிம்பம் கலைந்தது. அவரது 2 ஆவது ஆட்சிக் காலம் மக்களது நம்பிக்கையைச் சிதைத்தது. தனது கூட்டாளிகளோடு சேர்ந்து (Crony Capitalism) நாட்டைச் சீரழித்தார்.

அப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான குரல்கள் ஓங்கத் தொடங்கின. ‘ஜனநாயக சர்வாதிகாரிகளை’ உருவாக்கும் இந்த முறைமையின் (System) அபாயத்தை நான் ஆழமாக உணர்ந்த காலமாக 1988-2003 காலத்தைச் சொல்லலாம். இது பற்றித் தொடர்ந்தும் எழுதியும் பேசியும் பகிர்ந்தும் வந்திருக்கிறேன்.

2005 இல் மஹிந்த களமிறக்கப்பட்டார். இதுவரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளரொருவர், 50.29% என்ற அதிகுறைந்த வெற்றி வீதம் பெற்ற தேர்தல் அது. அதன் பின்னர் எங்கும் போர் முழக்கங்கள்தான் கேட்டன.

2009 இல் போர் முடிந்தது. 2010 இல் ‘சிங்களத் தேசத்தின்’ மீட்பராகவும் போரை வென்ற நவீன துட்டகைமுனுவாகவும், மஹிந்த பற்றிய புதியதொரு பிம்பம் உருவாக்கப்பட்டது. அவர் 57.88% வாக்குப் பெற்றார்.

அதுவரை தமிழ் சமூகத்தை நோக்கியே ‘எதிரி’ என்ற பாத்திரம் கட்டமைக்கப்பட்டிருந்தது. பின்-போர்க் கால சூழலில், முஸ்லிம் சமூகம் ‘புதிய எதிரியாக’ நிறுத்தப்பட்டது. மிகுதிக் கதை நமக்குத் தெரியும்.

2015 இல் பொது வேட்பாளராக மைத்திரி முன்னிறுத்தப்பட்டார். ராஜபக்சவைத் தோற்கடிக்க முடியாது என்ற கடுமையான அச்ச சூழல் அந்த நாட்களில் நிலவியது.
அப்போது எனக்கு 42 வயது.

9 வயதில் புதினம் பார்க்கச் சென்ற நான் 42 வயதில், முதல்முறையாக ஜனாதிபதித் தேர்தலொன்றின் நேரடிப் பங்காளியாக மாறினேன்.

இனியும் பார்வையாளராக இருக்க முடியாது என்ற வரலாற்றுப் பொறுப்பு என் தோள் மீது இருப்பதாக உணர்ந்த தீர்க்கமான காலகட்டம் அது.

மஹிந்தவின் குடும்ப மற்றும் அராஜக ஆட்சிதான் அதற்குக் காரணம். சகோதரர்களான நான், நஜா, அப்துர் ரஹ்மான், பிர்தௌஸ், முஜீபுர் ரஹ்மான், அர்க்கம், றிஸானா, ஹனான், ஸஃப்ரி உள்ளிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG,) பெரும் ஆபத்துக்கு மத்தியில் அப்போதைய பொது வேட்பாளரை ஆதரித்தது.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் மைத்திரி பேசிய முதல் கூட்டத்தை நாங்களே ஏற்பாடு செய்தோம். கத்திக்கு மேலால் நடந்த தேர்தல் அது. மைத்திரி தோற்று ராஜபக்ச வென்றிருந்தால் கதையே வேறு. அந்தளவு Risk எடுத்திருந்தோம்.

ஆனால், பின்னர் மைத்திரி-ரணில் கூட்டு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. அந்தத் தேர்தலில் மைத்திரி 51.28% வாக்குகளைப் பெற்றார்.

வேறு தெரிவோ வழியோ இல்லாத நிலையில்தான், அப்போது ஜனநாயக மீட்பு வேலைத்திட்டத்தை ஆதரித்தோம். மாதுளுவாவே சோபித தேரரின் தலைமையில் உருவான NMSJ யுடன் இணைந்து இயங்கினோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதில், முற்போக்கு சக்திகளோடு இணைந்து மிக உறுதியாக இருந்தோம். ஆரம்பத்தில் இதை ஒழிப்பதாக வாக்குறுதியளித்த மைத்திரி பின்னர் சோபித தேரரையும் எங்களையும் மக்களையும் ஏமாற்றினார்.

2019 இல் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றது எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது.
அந்த நெருக்கடியான நாட்களில் கோட்டபாயவை எதிர்த்து, தோழர் அனுரவை தீவிரமாக ஆதரித்தோம். மாற்று அரசியல் சக்தியை வலுப்படுத்துவதே எமது முதன்மைத் தெரிவாக இருந்தது. பல பிரச்சார மேடைகளில் பேசினோம்.

தோழர் அனுரவை அப்போது முஸ்லிம் சமூகத்தில் பெரிதாக யாரும் ஆதரிக்கவில்லை. அந்தத் தேர்தலில் கோடாபாய 52.24% வாக்குகளால் வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் அராஜகம் உச்சத்தைத் தொட்டது. 10 அல்லது 20 வருடங்களுக்கு ராஜபக்சக்களைத் தோற்கடிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

காலம் மாறியது- காட்சிகள் மாறின.

‘அரகலய’ உருவானது. நம் கண் முன்னே வரலாறு உருமாறும் மக்கள் போராட்டம் நடந்தது. அதிலும் பங்காற்றினோம். இரண்டே இரண்டு வருடத்தில் கோட்டாபய நாட்டை விட்டே ஓடினார். மீதி காலம் ‘ரணில்’ என்றானது.

இப்போது 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். ஒரு சிறு மாற்றம்: மாற்று சக்தியை- அதன் வேட்பாளரான தோழர் அனுரவை ‘நிபந்தனைகளுடனும் அரசியல் கோரிகைகளுடனும்’ ஆதரிப்பதே ஒப்பீட்டளவில் சிறந்த தெரிவாக இருக்கிறது.

அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அவர்களை வகை சொல்பவர்களாக (Accountability) – கூடுதல் பொறுப்பு மிக்கவர்களாக (Responsibility) மாற்ற வேண்டும், முக்கியமான விடயங்களிலே அவர்களைப் பேச வைக்க வேண்டும், அந்த அழுத்தத்தைக் (Pressure) கொடுக்க வேண்டும் என்று, என்னோடு ஒன்றாகப் பயணிக்கும் தோழர்களோடு இணைந்து நானும் உறுதியாக நம்புகிறேன்.

இதுகுறித்து இடம்பெற்ற சமூக நீதிக் கட்சியின் (Social Justice Party) ஊடக சந்திப்பில் தெளிவாகப் பேசியிருக்கிறோம்.

இந்தமுறை யாருமே 50% + 1 வாக்குகளை முதல் சுற்றில் பெற மாட்டார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனாலும், மாற்று சக்திக்கு வலுவான வாக்குத் தளம் உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுகிறது. அது மகிழ்ச்சி தருகிறது. நல்லது நடக்க உழைப்போம்; பிரார்த்திப்போம்.

இந்த நாட்டை 76 ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட கட்சிகளை – சிதைத்து சீரழித்து சின்னாபின்னமாக்கியவர்களை- அதற்குத் துணை நின்றவர்களை- அதனோடு ஒத்தோடிய சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கட்சிகளை – அதன் எச்ச சொச்சங்களை எம்மால் ஆதரிக்க முடியாது.

உச்சகட்ட பொருளாதார நெருக்கடியை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். அத்தோடு ஊழல், மோசடிக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் காரணமானவர்கள். இனப்பிரச்சினையைத் தீர்வின்றி இழுத்தடித்து இடியப்பச் சிக்கலாக மாற்றியவர்களும் இவர்கள்தான்.

ஒரு பிரச்சினையை உருவாக்கியவர்கள், அதைத் தீர்க்கும் வழி தெரியாமல் தடுமாறுவதற்குக் காரணம், திரும்பத் திரும்ப ஒரே வகையாகச் சிந்திப்பதுதான்.
இவர்கள் வித்தியாசமாகச் சிந்திக்கத் தெரியாமல், மீண்டும் மீண்டும் சிக்கலை அதிகரிப்பார்கள் என்பதை வரலாறு நெடுகிலும் கண்டு வந்திருக்கிறோம். அதனால்தான் நாடு தோல்வியடைந்து நடுத்தெருவில் நிற்கிறது.

இப்போது தேவை மாற்றுப் பார்வையும் முற்றிலும் புதிய தீர்வும்தான்.
அதனால்தான் மாற்று சக்தியை – தேசிய மக்கள் சக்தியை- ‘நிபந்தனைகளுடனும் அரசியல் கோரிக்களுடனும்’ ஆதரிப்போம் என்கிறோம்.

இந்ந நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தத் தேர்தல் பற்றிய எனது பார்வைகளைத் தொடர்ந்தும் எழுதவுள்ளேன்.
அது முடிந்த வரை நேர்மையான- சமநிலையான அரசியல் பார்வையாக இருக்கும்.

இப்போது எனக்கு 51 வயது. 50s Club இல் இருக்கிறேன்.
வரலாறு ஒரே திசையில் செல்வதில்லை. காலங்கள் மாறும், காட்சிகள் மாறும். அதற்கு என் சொந்த அனுபவமே சிறந்த சாட்சியாக இருக்கிறது.

அன்புடன்,
சிராஜ் மஷ்ஹூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *