February 21, 2024
KTV தமிழ்
Image default
இயற்கை

சுட்டி முதல் பாட்டி வரை… அதிகரிக்கும் கழுத்துவலி!

சில தினங்களுக்கு முன் நடுத்தர வயது ஆண் ஒருவர் தான் ஜிம்முக்கு சென்றதாகவும், அங்கே இருப்பவர்களின் அறிவுரை இல்லாமல் அதிக எடையுள்ள இரும்புக் கம்பியை தூக்கி பயிற்சி செய்ததாகவும் சொன்னார். அதன் விளைவாக தோள்பட்டை வலி வந்ததால் என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார்.

சோதித்துப் பார்த்ததில் தோள்பட்டையில் உள்ள Trapezius எனப்படும் தசைகள் காயம் (injury) ஆகியிருப்பது தெரிய வந்தது. பின் அதற்கான காரணங்களை விளக்கி சிகிச்சையும் அளித்தேன். இவ்வாறான காயங்கள் இளம் வயதுடைய ஆண்களிடமும், பெண்களிடமும் அதிகம் காணலாம். இதற்கு முக்கியக் காரணம் தவறான வழியில் உடற்பயிற்சி செய்வதுதான். மேலும் என்ன மாதிரியான காரணங்கள் இருக்கிறது, அதற்கு எவ்வகையான தீர்வுகள் காணலாம் என்பது பற்றியெல்லாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

கழுத்து தசை காயம்…

தலைக்கும் தோள்பட்டைக்கும் (shoulder) இடையே உள்ள பகுதியை கழுத்து என்று நாம் சொல்வோம். இதில் பின்னங்கழுத்து எலும்புகளுக்கு சிறிய அளவு தசைகள் நிறைய இருக்கும். அதற்கும் மேல் அனைத்தையும் மூடும் விதமாய் ஒரு பெரிய தசை அமைந்திருக்கும். இதுவே trapezius என்று மருத்துவத்தில் சொல்வோம்.

இந்த தசை இருபக்கமும் மண்டை ஓட்டின் அடிப்பகுதியிலிருந்து நடுமுதுகு வரை வைர வடிவத்தில் (diamond) வடிவமைந்திருக்கும். இவ்வாறான இந்த தசைகள் தலை மற்றும் தோள்களை இணைத்து கழுத்திற்கு பெரிய உருவ அமைப்பை தரக்கூடியது. இதனை மூன்று தசைநார்களாய் மருத்துவத்தில் பிரிப்போம்.

1. மேலே தோள்பட்டைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையே உள்ளது. இதுவே மற்ற இரண்டைக் காட்டிலும் பெரியது.
2. அதற்கு கீழே சிறிதாய் உள்ளது ‘நடுநிலை தசை நார்கள்’.
3. அதற்கும் கீழே உள்ள மூன்றாவது மற்றும் கடைசி தசைநாரும் சிறிதாய் இருக்கும்.
எனவே இந்த மூன்று தசை நார்களில் எதில் பிரச்சனை ஏற்பட்டாலும் Trapezitis என்று மருத்துவத்தில் சொல்வோம். மூன்று தசைநார்களுக்கும் வேறாக இருப்பினும் மூன்றும் ஒரே தசை என்பதால் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

காரணங்களும் ஆபத்துக் காரணிகளும்…

*நீண்ட நேரம் ஒரே இடத்தை பார்த்துக் கொண்டிருப்பது. (உதாரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்பில் ஓரமாய் உட்காரும்போது நடுவில் இருக்கும் ஆசிரியரைப் பார்க்க ஒருபக்கமாகவே தம் தலையை திருப்பி வைத்திருப்பதை சொல்லலாம்.)

*நீண்டநேரம் தன்னை அறியாமல் கீழே குனிந்தவாறே கழுத்தை வைத்திருப்பது. (உதாரணமாக, செல்போன் உபயோகிப்பவர்கள்)

*ஒழுங்குமுறை (அதாவது, நேரே நிமிர்ந்து) இல்லாமல் அமர்வதால் கழுத்தையும் அதற்கு ஏற்றாற்போல் கோணலாய் வைத்திருப்பது.

*வெகுநேரம் ஒரு பக்கமாக  படுத்து உறங்குவது.

*அதிக அளவு கணினி உபயோகம் செய்வது.

*வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் சரியான மேஜை நாற்காலி இல்லாமல் கண்டமேனிக்கு உட்கார்ந்தும், படுத்துக்கொண்டும், சாய்ந்துகொண்டும் வேலை பார்ப்பது.

*இயன்முறை மருத்துவர் இல்லாத உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வது.

*இயன்முறை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாகவே உடற்பயிற்சி செய்வது.

*யூடியூப்  மற்றும் தொலைக்காட்சி பார்த்து உடற்பயிற்சி செய்வது.

*இவற்றோடு, தொடர்ந்து வண்டி ஓட்டுபவர்கள், சமையல் செய்பவர்கள், எழுதுபவர்கள், வரைபவர்களுக்கு எனப் பலருக்கு இந்த தசைப் பிரச்சனை வரக்கூடும்.

அறிகுறிகள்…

*முதலில்  சாதாரணமாய்  ஒருபக்க கழுத்து வலி வரும்.

*நாள் ஆகஆக கழுத்து தசை பகுதியில் வலி அதிகமாவதோடு, விறுவிறுவென தசையில் எரிச்சல் உணர்வும் ஏற்படும்.

*ஒரு பக்கமாக தலை வலியும் அதிகரிக்கும். கழுத்துக்கு போகும் நரம்பு தலைக்கும் போவதால் இந்த தலைவலி ஏற்படுகிறது.

*சிகிச்சை எடுக்காமல் இருந்தால் தொடர்ந்து தினமும் வலி வரும்.

உள்ளே என்ன நடக்கிறது…?

*தசைகள் இறுக்கமாய் (tight) இருந்தாலும் வலி உண்டாகும். அதேபோல் தசைகள் பலவீனமாய் (weak) இருந்தாலும் அதற்கேற்ப வலி உண்டாகும். இந்த தசையில் வித்தியாசமாய் இரண்டும் ஏற்படும். அதாவது மேலே உள்ள முதல் தசைநார் இறுக்கமாகவும், கீழே உள்ள தசைநார்கள் பலவீனமாய் இருக்கும். இதனால் வலி ஏற்படுகிறது.

*மேலும் இதனை சரி செய்யாமல் விட்டால் சுற்றியுள்ள தசைகளுக்கும் சேதாரம் விளைவிக்கும்.

*சிலர் வலி ஏற்படும்போது ஓய்வு எடுத்துக்கொண்டும், மாத்திரை மருந்துகள் சாப்பிட்டும் சமாளிப்பார்கள். இது தற்காலிக தீர்வே ஒழிய நிரந்தரத் தீர்வு கிடையாது.

*மேலும் தொடர்ந்து இந்த தசைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் இளம் வயதிலேயே கழுத்து எலும்புகள் தேயத் தொடங்கும்.

இயன்முறை மருத்துவம்…

*இறுக்கமான தசைகளை ‘சிறப்பு இயன்முறை மருத்துவ முறைகள்’ மூலம் இலகுவாக்குவார்கள்.

*மேலும் தசைகளை தளர்த்துவதற்கும், பலவீனமான தசைகள் வலிமை பெறவும் பயிற்சிகள் வழங்குவர்.

*இயன்முறை மருத்துவ உபகரணங்களைக் கொண்டு வலியை குறைப்பர்.

*சிகிச்சை காலம் முடிந்த பின்பும் செய்வதற்கான உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து அவற்றை கற்றுக் கொடுப்பர்.

*மேலும் வீட்டில் அலுவலகத்தில் செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை போன்றவற்றையும் அறிவுரை செய்வர்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை…

*மருந்து, மாத்திரைகள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இதனால் வலி தற்காலிகமாக மறையுமே அன்றி ஒருபோதும் நிரந்தரத் தீர்வு தராது. அதோடு குடல் போன்ற  உடல் உறுப்புகளும் பாதிக்கக்கூடும்.

*சரியான மேஜை நாற்காலி கொண்டு வேலை செய்வது.

*குறைந்த நேரம் மட்டுமே கைப்பேசி உபயோகிப்பது.

*தொடர்ந்து கணினியில் வேலை செய்பவர் தேவையான உடற்பயிற்சிகளுடன் நாளை தொடங்குவது அவசியம்.

*இயன்முறை மருத்துவரின் அறிவுரை யின்றி உடற்பயிற்சிகள் செய்வது தேவையில்லாத விளைவுகளை உண்டாக்கும்.

‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதால் நம் உடல் சிறப்பாய் இயங்க தேவையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வோம். தேவையற்ற தசைப் பிரச்சனைகளிலிருந்து இயன்முறை மருத்துவம் துணைகொண்டு நம்மை பாதுகாப்போம்.

Social Media Links

WhatsApp Channel: https://rb.gy/gkpghl

Facebook Page: https://www.facebook.com/KTVSrilankan

YouTube Channel: https://www.youtube.com/ktvsrilanka

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி