February 21, 2024
KTV தமிழ்
Image default
இயற்கை

மன அழுத்தத்துக்கு மாமருந்து.

மன அழுத்தமாக இருக்கும்போது அதை தவிர்க்க என்னென்னவோ செய்து பார்த்திருப்பீர்கள். எப்போதேனும் நடைப்பயிற்சியை முயற்சித்ததுண்டா? இல்லையெனில் இனி நடைப்பயிற்சி மேற்கொண்டு பாருங்கள். நடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல தியானமாகவே கருதுகின்றனர் நவீன உளவியலாளர்கள். அதை Walking meditation என்றும் கூறுகின்றனர். புத்த மத நூல்களும் இந்த நடைப்பயிற்சி தியானம் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. சரி… எப்படி நடப்பது பலன் தரும்?!

இயற்கையோடு இணைந்திருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான பகுதிகளில் நடை பழகுவது என்பது நமது படைப்பாற்றலையும் தூண்டக் கூடியது. முதலில் அதுபோன்ற இடத்தை முதலில் தேர்ந்தெடுங்கள். நடக்கத் தொடங்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நிதானமாக  இருக்க வேண்டும். அவசரம் கூடாது. மனதை ஒருமைப்படுத்துங்கள். சுற்றி நடக்கும் சம்பவங்கள், அலைபோல் எழும் சிந்தனைகள், நேற்றைய நினைவு எச்சங்கள், இன்றைய எதிர்பார்ப்புகள் இப்படி எதையுமே நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக மண்ணின் மீது படும் நமது பாதங்களை அதன் அழுத்தங்களை மட்டுமே கவனிக்க வேண்டும்.

ஒன்று, இரண்டு, மூன்று என்று நமது பாதம் அழுந்த அழுந்த மெல்ல எண்ண வேண்டும். நம்மை சுற்றியிருக்கும் இயற்கை எனும் பேரதிசயத்தை கவனியுங்கள். கம்பீரமாக நிற்கும் மலைகளைப் பாருங்கள். பூத்துக் குலுங்கும் மலர்களைப்  பாருங்கள். கிரிச் கிரிச் என்னும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலிக்கவிதைகளைக்  கேளுங்கள். சற்றே அண்ணாந்து அகண்டிருக்கும் நீல வானத்தைப்  பாருங்கள். இதுபோல் ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களாவது உங்களுக்கான ஏகாந்த தனிமையில் இயற்கை எழில் நிரம்பிய சூழலில் நடந்து பழகுங்கள்.

ஆழமாக மூச்சை இழுத்து, அவசரம் இல்லாமல் வெளியே விட்டுக்கொண்டே அமைதியாக  நடக்க பழக வேண்டும். நமது முழு கவனமும் உள்ளே/வெளியே இழுக்கும் மூச்சில்  மட்டுமே இருக்க வேண்டும். இந்த தியான நடைப்பயிற்சி எடை குறைக்க  விரும்புகிறவர்களுக்கானது அல்ல. மன அழுத்தம் குறைவதற்கும் நம்மை  புத்தாக்கம் செய்துக் கொள்வதற்கும்தான் இந்த நடை தியானம். முடிந்தவரை இப்படி  நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தனியே செல்வது நல்லது.

நாம் என்னும்  அகங்காரம் நம்மை விட்டு அகலும் அற்புதமான தருணங்களை அந்த காலை நேர நடையில்  நீங்கள் உணர்வீர்கள். இதை எல்லாம் விடுத்து, கிளம்பும் போதே ஒரு படையுடன்,  அரசியலில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட் வரை உலகின் எல்லா பிரச்சினைகளையும்  பேசிக்கொண்டு நடப்பது கூடாது. அந்த நேரத்திலும் சும்மா இருக்காமல் காதில்  வயர்போனை சொருகிக்கொண்டு காச் மூச் என்கிற சப்தங்களை கேட்டு மீண்டும் மனதை  டென்ஷனிலேயே வைத்திருக்க வேண்டாம்.

இந்த நடைப்பயிற்சி நேரத்தை நமக்கான சக்தி சேகரிப்பு நிகழ்வாகக் கருத வேண்டும். எடை குறைக்க முயற்சிக்கிறவர்களுக்கு இதுபோன்ற நடைப்பயிற்சி பலன் தராது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிதான நடைப்பயிற்சி என்பது முழுக்க முழுக்க மன அழுத்தத்துக்கு மருந்து தடவவும், தவிர்க்கவும் மட்டுமே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

எதையும் சிந்திக்காமல் அந்த நேரத்தில், அந்தப் பொழுதில் நம்மை நாம்  பரிபூரணமாக ஆட்படுத்திக் கொள்வதைத்தான் Mindfullness என்கிறது உளவியல்.  இப்படி நடைப்பயிற்சியில் மட்டும் அல்ல… ஒவ்வொரு செயலிலும் மனப்பூர்வமான  முழு மன ஈடுபாட்டை செலுத்தும்போது மனநோய்கள் நம் அருகில் நெருங்க முடியாது.  மன அழுத்தம் என்கிற சொல்லுக்கே உங்கள் அகராதியில் இடம் இருக்காது.    

Tags:

Social Media Links

WhatsApp Channel: https://rb.gy/gkpghl

Facebook Page: https://www.facebook.com/KTVSrilankan

YouTube Channel: https://www.youtube.com/ktvsrilanka

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி